சாதனை படைத்த மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.


 

போதைப்பொருள் பாவனையினை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் மட்டக்களப்பில் பொது இடங்களை கண்காணிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவருமான வி.வாசுதேவன் தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற தேசிய பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டு,தேசிய தமிழ் தினபோட்டி மற்றும் மாகாண மட்ட போட்டிகளில் சாதனை படைத்த மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இராம கிருஸ்ண மிசனில் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் மகராஜினால் வழிபாடுகள் நடாத்தப்பட்டு சாதனையாளர்களுக்கு ஆசிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து மிசனிலிருந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு பாடசாலை வரையில் பேண்ட் வாத்தியங்களுடன் மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் சுவர்ணேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு,கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க தலைவருமான வி.வாசுதேவன் கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் மல்யுத்த போட்டியில் ஒரு தங்கம்,இரண்டு வெள்ளி,ஒரு வெண்கலப்பதக்கத்தினை தேசிய ரீதியான போட்டியில் வெற்றிபெற்று பெற்றுக்கொண்ட மாணவர்கள்,தேசிய தமிழ் மொழி தினம் மற்றும் கிழக்கு மாகாண பாடசாலை மட்டப்போட்டிகளில்வெற்றிபெற்ற மாணவர்கள் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மல்யுத்தப்போட்டியில் தேசிய சாதனை படைப்பதற்கு உறுதுணையாகயிருந்த சாண்டோ விளையாட்டுக்கழக தலைவரும் மல்யுத்த பயிற்றுவிப்பாளரும் ஆசிரியருமான திருச்செல்வம் மற்றும் தேசிய தமிழ்தின போட்டியில் மாணவர்கள் வெற்றிவாகைசூடுவதற்கு காரணகர்த்தாவாகயிருந்த சங்கீத ஆசிரியை திருமதி ஜெயஷி கலிங்கேஸ்வரன் மற்றும் ஏனைய பிரிவுகளில் மாணவர்களை வழிநடாத்திய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.