அரச நிறுவனங்களில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டங்கள், விசேட நிகழ்வுகளின்போது நட்சத்திர ஹோட்டல்களிலிருந்து உணவுகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்துமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அநேகமான அரச நிறுவனங்களில் இடம்பெறும் உயர்மட்டக் கூட்டங்களின்போது நடசத்திர ஹோட்டல்களிலிருந்து உணவை பெற்றுக்கொள்வது வழமையான நடைமுறையாக உள்ளது.
தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு இவ்வாறான செலவுகளை மேற்கொள்வது ஏற்புடையதல்ல என்று தெரிவித்த அரசாங்கத்தின் சிரேஷ;ட அதிகாரியொருவர், அரச நிறுவனங்களின் செலவுகளை இயன்றவரை மட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சிந்தக மாயாதுன்னே, புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் உயர்மட்ட கூட்டங்களுக்கு நட்சத்திர ஹோட்டல்களில் இருந்து உணவு கொண்டுவருவதற்கு அதிகளவு பணம் செலவிடப்படுவதாக குற்றம் சுமத்தினார்.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் மூழ்கியுள்ள வேளையில் இவ்வாறு பணத்தை வீணடிப்பது பொருத்தமானதல்ல என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே அரச நிறுவனங்களில் இயன்றவரை செலவீனங்களைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





