விளையாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட 50ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மல்யுத்தப் போட்டிகள் 15.11.2026 அன்று நிட்டம்புவ, வத்துப்பிட்டிவல உள்ளக விளையாட்டு அரங்கில் ஒன்பது மாகாணங்களுக்கிடையில் நடைபெற்றன.
இப்போட்டியில் கிழக்கு மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாகப் பங்கேற்ற கரடியனாறு பகுதியைச் சேர்ந்த T. தர்மி, 50 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தைத் தனதாக்கிக் கொண்டார்.
இச்சாதனையைப் பாராட்டி, ஏறாவூர்ப்பற்று – செங்கலடி பிரதேச செயலாளர் திரு. K. தனபாலசுந்தரம், உதவிப் பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் இணைந்து வீராங்கனை தர்மியை நேரில் வாழ்த்திப் பாராட்டினர்.
குறிப்பாக, இவ்வீராங்கனை 2024 மட்/மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்துக்குவெள்ளி பதக்கத்தையும் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மல்யுத்தப் போட்டிகளில் மட்/விவேகானந்தா மகளிர் பாடசாலைக்காகத் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் தங்கப்பதக்கங்களை வென்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்தவர்.
அத்துடன், 2026ஆம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் இலங்கையின் சிறந்த மல்யுத்த வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மட்டக்களப்பு, நொச்சிமுனை சாண்டோ சங்கரதாஸ் மல்யுத்தக் கழகத்தில் பயிற்சி பெற்று வரும் வீராங்கனையாவார்.
பயிற்றுவிப்பாளர் வேலு திருச்செல்வம் ஆசிரியரின் வழிகாட்டல் மற்றும் பயிற்சியின் கீழ், முப்படைகளைச் சேர்ந்த வீராங்கனைகளையும் எதிர்கொண்டு தனது திறமையை நிரூபித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தனது தொடர் முயற்சி, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பின் மூலம் மட்டக்களப்பு மண்ணுக்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை T. தர்மிக்கு விளையாட்டுத்துறை சார்ந்த பலரும் தமது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.







