05.11.2026
'எமக்கான கூடு' என்னும் நாடக ஆற்றுகை குறித்து...
ஈழத்தமிழர்தம் நாடக அரங்கச் செயற்பாடுகளில், பாதிப்புகளை எதிர்கொண்டு வாழும் மனிதர்கள் தாம் எதிர்கொள்ளும் எதிர்மறை அனுபவங்களையும், சவால்களையும் பொது வெளிகளில் எடுத்துரைத்து அவை தொடர்பிலான உரையாடல்களை சமூகங்களிடையே பரவலாக்கி நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் கொள்வதற்காக நாடக அரங்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை கவனத்திற்குரியதாக இருந்து வருகின்றது.
இத்தகைய நாடக அரங்கச் செயற்பாடுகளை மேற்கொள்வதில் கிழக்கிலங்கையில் முன்னோடியாகச் செயலாற்றி வருவதில் மட்டக்களப்பின் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் பாடினிகள் கலாசாரக் குழுவினருக்கும், மூன்றாவதுகண் உள்ளூர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர்கள் குழுவினருக்கும் தனித்துவமான பக்கங்கள் இருந்து வருகின்றன.
களப்பயிற்சிரங்க முறையூடாக, ஆய்வு அரங்க அளிக்கைகளாக இவை உருவாக்கப்பட்டுப் பொது வெளிகளுக்கு ஆற்றுகை வடிவில் கொண்டு வரப்படுகின்றன.
தன்னார்வமான நண்பர்களின் பங்களிப்பில் தற்சார்பாகவும், நிதியுதவிகளைப் பெற்றுக் கொண்டும் இத்தகைய காத்திரமான நாடக அரங்கச் செயற்பாடுகள் நடந்தேறியுள்ளன, நடந்தேறி வருகின்றன.
வெறுமனே ஆற்றுகையுடன் நிறைவு பெறாமல், ஆற்றுகையின் பின்னரான உரையாடல்கள் ஊடாகவே இந்த நாடக அரங்க அளிக்கைகள் பூரணத்துவம் பெறுகின்றன.
இத்தகைய நாடக அரங்கச் செயற்பாடுகளில் எடுத்தாளப்படும் விடயங்களுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்ட மனிதர்கள் பங்காளர்களாகவும், உருவாக்குனர்களாகவும் இருந்து வருகின்றமை கவனத்திற்குரியது.
இத்தகைய நாடக அரங்க ஆற்றுகைகளின் மரபில் 'எமக்கான கூடு' என்ற பெயரில் ஒரு நிகழ்த்துகை கடந்த 04.11.2026 ஆந் திகதி புதன்கிழமை முற்பகல் மட்டுநகர் வை. எம். சி. ஏ மண்டபத்தில் நடந்தேறியது.
'அடையாளம்' கொள்கை ஆய்வுக்கான நிலையம், சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம், 'வண்ணம்' மாற்றுத் திறனாளிகள் பெண்கள் குழு என்பவற்றின் கூட்டுச் செயற்பாட்டினூடாக இந்த நாடக அரங்க அளிக்கை உருவாக்கம் பெற்றிருந்தது.
இருபதிற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிப் பெண்கள் பொது வாழ்விலும், அனர்த்த காலங்களிலும் தாம் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளையும், சவால்களையும், எதிர்மறை அனுபவங்களையும் அரங்கில் காத்திரமான ஆற்றுகையாகச் செய்திருந்தார்கள்.
வழமையானவைதானே, பொதுவானவைதானே என்று சொல்லப்பட்டுக் கடந்து செல்லப்படும் பல்வேறு விடயங்களிலும் மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் மிக நுணுக்கமான சவால்கள் தொடர்பான வெளிப்படுத்தல்களை இந்த அரங்க ஆற்றுகை காட்டியிருந்தது. அவை குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்த்தியிருந்தது.
இற்றைக்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் கப்பயிற்சியரங்குகளில் ஒரு பாடினியாகக், கதை சொல்லியாக மேற்கிளம்பி ஆக்கபூர்வமான பெண்ணிலைவாத ஆளுமையாகத் தொடர்ச்சியாக இயங்கிவரும் விஜயலட்சுமி சேகர் அவர்கள் இந்த நாடக அரங்க ஆற்றுகை உருவாக்கத்திற்கான களப்பயிற்சியின் எடுத்தாளுனராகப் பணியாற்றியுள்ளார்.
நாடக ஆற்றுகையைத் தொடர்ந்து பார்வையிட்ட பலரும் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்தார்கள்.
இந்த நாடக ஆற்றுகை தொடர்ந்தும் பல இடங்களில் பொது மக்கள், அரச அலுவலர்கள் எனப்பல்வேறு தரப்பினரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட வேண்டியதன் தேவையைப் பலரும் வலியுறுத்தியிருந்தனர்.

.jpeg)

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)




