பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் விழிப்புணர்வுப் பிரசாரத்தை முன்னிட்டு திருகோணமலை பெண்கள் வலையமைப்பினால் விழிப்புணர்வுச் செயலமர்வொன்று நடத்தப்பட்டது.
நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் இப்பிரசாரத்தின் ஒரு அங்கமாக, திருகோணமலை பெண்கள் வலையமைப்பின் காரியாலயத்தில் இச்செயலமர்வு நடைபெற்றது.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்துதல், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிப்பதைத் தடுத்தல் மற்றும் முறைப்பாடு செய்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டன.
இச்செயலமர்வில் வளவாளராகக் கலந்துகொண்ட பெண்கள் வலை அமைப்பின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான பாத்திமா முனாசிர், குறித்த விடயங்கள் தொடர்பான விளக்கங்களையும் விழிப்புணர்வுத் தகவல்களையும் வழங்கினார்.
பெண்கள் வலை அமைப்பின் இணைப்பாளர் கிரிஜா சக்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைப்பின் உத்தியோகத்தர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





