கிழக்கு – மேற்கு இளைஞர்களிடையே நல்லிணக்கப் பாலம்! புதுக்குடியிருப்பில் ஆறு நாள் இளைஞர் பரிமாற்று நட்புறவு வேலைத்திட்டம் ஆரம்பம்

 

































இளைஞர்களிடையே நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் மேம்படுத்தி, கிழக்கு – மேற்கு சகோதரத்துவ உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இணைந்து முன்னெடுக்கும் இளைஞர் பரிமாற்று நட்புறவு வேலைத்திட்டம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையத்தில் ஆரம்பமாகியுள்ளது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் மகரகம இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்களுக்கும் இடையிலான இவ்வேலைத்திட்டம் 2026 நவம்பர் 28ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 03ஆம் திகதி வரை ஆறு நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த ஆறு நாள் வேலைத்திட்டத்தின் போது மகரகம இளைஞர் பயிற்சி நிலையத்தைச் சேர்ந்த சகோதர இன இளைஞர், யுவதிகள் புதுக்குடியிருப்பு கிராமத்திலும், இளைஞர் பயிற்சி நிலைய மாணவர்களின் வீடுகளிலும் தங்கியிருந்து, மட்டக்களப்பு பிரதேசத்தின் கலை, இலக்கியம், பண்பாடு, கலாசாரம் மற்றும் வாழ்க்கை முறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறவுள்ளனர்.

இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, பரஸ்பர மதிப்பு, சகோதரத்துவம் மற்றும் சகவாழ்வை வலுப்படுத்துவதுடன், இளைஞர்களிடையே நட்புறவை வளர்த்தெடுக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி கிஸ்கந்த முதலி தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அருள்ராஜ், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் நிசாந்தி அருள்மொழி, மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான சசிக்குமார், தயாசீலன், மாவட்ட நிஸ்கோ முகாமையாளர் அருளானந்தம், இளைஞர் சேவை அதிகாரிகள், புதுக்குடியிருப்பு ஸ்ரீ விக்கனேஸ்வரர் மற்றும் கண்ணகி அம்பாள் ஆலய பரிபாலன சபையினர், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் கழக உறுப்பினர்கள், பயிற்சி நிலைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மற்றும் மேற்கு மாகாண இளைஞர்களுக்கிடையில் நேரடி அனுபவப் பகிர்வு, கலாசாரப் பரிமாற்றம் மற்றும் மனிதநேய உறவுகளை வலுப்படுத்தும் இவ்வாறான வேலைத்திட்டங்கள் நாட்டின் எதிர்கால நல்லிணக்கத்திற்கான முக்கியமான முன்னெடுப்புகளாக அமைகின்றன.