EDITOR
மட்டக்களப்பு, கல்லடி வேலூர் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தினால், டேக்வாண்டோ (Taekwondo) தற்காப்புக் கலைப் போட்டியில் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்த கல்லடி வேலூர் பிரதேசத்தைச் சேர்ந்த ஜே. ஜெஸிக்கா கௌரவிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவியான ஜெஸிக்கா, தேசிய மட்டத்தில் இச்சாதனையைப் படைத்து தனது பாடசாலைக்கும், வேலூர் பிரதேசத்திற்கும் மட்டுமன்றி கல்லடி பெருநிலப்பரப்பிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த கௌரவிப்பு நிகழ்வில், ஓய்வுநிலை அதிபரும் சித்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையின் பொறுப்பாசிரியருமான திருமதி அருட்சோதி அவர்கள், ஜே. ஜெஸிக்காவுக்கான கௌரவத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
கல்லடி ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானம், வருடந்தோறும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களையும், பல்கலைக்கழக அனுமதியைப் பெறும் மாணவர்களையும் அடையாளம் கண்டு கௌரவித்து வருகின்றது.
கல்விச் சாதனையாளர்களை மாத்திரமன்றி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தும் இளம் தலைமுறையினரையும் ஊக்குவித்து அங்கீகரிக்கும் இத்தகைய செயற்பாடுகள் சமூகத்தில் ஆரோக்கியமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகின்றன.
ஆலயங்கள் ஆன்மிகப் பணிகளுடன் நின்றுவிடாமல், கல்வி, விளையாட்டு மற்றும் இளம் தலைமுறையினரின் ஆளுமை விருத்திக்கும் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்பதற்கு கல்லடி ஸ்ரீ பத்ரகாளியம்மன் தேவஸ்தானத்தின் இச்செயற்பாடுகள் ஏனைய ஆலயங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.
இளம் தலைமுறையினரின் சாதனைகளை அடையாளம் கண்டு பாராட்டி ஊக்குவிக்கும் இத்தகைய பணிகள் தொடர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.







