தமிழ்ப் பொறியியலாளர் கலாநிதி விஷ் பொன்னம்பலத்துக்கு சிட்னி பல்கலைக்கழகத்தின் சர்வதேச விருது!

 



போர்ச் சூழலில் இலங்கையில் வளர்ந்து, இன்று உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்புப் பிரிவின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இலங்கைத் தமிழரான பொறியியலாளர் கலாநிதி விஷ் பொன்னம்பலம், சிட்னி பல்கலைக்கழகத்தின் 2026ஆம் ஆண்டுக்கான புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு (Innovation and Entrepreneurship) பழைய மாணவர் விருதைப் பெற்றுள்ளார்.

போர்ச் சூழலில் தனது இளமைக்காலத்தைக் கழித்த அவர், அக்காலத்தில் வெற்றி என்பது உயிர் பிழைத்தல், நிலையான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல் மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ளுதல் என்பவற்றுடன் மட்டுமே தொடர்புபட்டிருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

ஆனால், இன்று வெற்றியை அளவிடும் தனது பார்வை முற்றிலும் மாறிவிட்டதாகவும், தான் ஏற்படுத்தியுள்ள தாக்கமும், தனது முயற்சிகளால் பயனடைந்துள்ள மனிதர்களுமே உண்மையான வெற்றியின் அளவுகோல்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது கூகுள் நிறுவனத்தில் AI Infrastructure Lead என்ற முக்கிய பொறுப்பில் பணியாற்றும் கலாநிதி விஷ் பொன்னம்பலம், உலகளாவிய வயர்லெஸ் தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார்.

குறிப்பாக, Wi-Fi, 4G மற்றும் 5G போன்ற உலகளாவிய தொடர்பாடல் தரநிலைகளின் உருவாக்கத்தில் அவர் பங்களித்துள்ளதுடன், அவரது பெயரில் 30க்கும் மேற்பட்ட காப்புரிமைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் மெட்டா (Meta) நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில், ஆபிரிக்கா, ஆசியா மற்றும் இலத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பிராந்தியங்களில் இணைய அணுகலை விரிவுபடுத்தும் திட்டங்களுக்குத் தலைமை தாங்கியுள்ளார்.

அவரது தலைமையிலான பொறியியல் குழுக்கள் உருவாக்கிய தொழில்நுட்பத் தீர்வுகள் இன்று உலகின் பல்வேறு நாடுகளில் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை, இதற்கு முன்னர் MediaTek நிறுவனத்தில் பணியாற்றியபோது, குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடிய தொடர்பாடல் தொழில்நுட்பங்களை உருவாக்குவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

கலாநிதி விஷ் பொன்னம்பலம் தனது உயர்கல்வியை அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தவர். 1996ஆம் ஆண்டு பொறியியல் துறையில் கௌரவ இளமாணிப் பட்டத்தையும், 2001ஆம் ஆண்டு மின் மற்றும் இலத்திரனியல் பொறியியலில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

போரின் சவால்களுக்கு மத்தியில் உருவான கல்விப் பயணம், உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் தலைமைத்துவம், 30க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் எனப் பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்துள்ள கலாநிதி விஷ் பொன்னம்பலத்துக்கு கிடைத்துள்ள இந்த விருது, இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கும் பெருமை சேர்க்கும் ஒரு சர்வதேச அங்கீகாரமாக அமைந்துள்ளது.