2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (18) நாடளாவிய ரீதியில் ஒரு நாள் அடையாளப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ருஹுண பல்கலைக்கழகத்தைத் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இந்தப் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய அரசாங்கம் தனது முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே பல்கலைக்கழகக் கட்டமைப்புக்கு பாரிய அநீதியை ஏற்படுத்தியதாகவும், இது தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது பிரதமரும் பிரதி நிதி அமைச்சரும் அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக உறுதியளித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
எனினும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், மாறாக மேலும் பல பிரச்சினைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கெதிராகவே இன்று அடையாளப் பணிப்புறக்கணிப்புடன் பாரிய எதிர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ருஹுண பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளதால், அந்தப் பல்கலைக்கழகம் மாத்திரம் இப்போராட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய அனைத்துப் பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களும் பணிப்புறக்கணிப்பில் இணைந்துள்ளனர்.
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் முன்பாகவும் ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன், கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும், தற்போதைய ஜனாதிபதியுடன் தொடர்ந்து கலந்துரையாடல்களை நடத்துவதற்குக் கோரி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனினும், இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் இதுவரை ஒரு சதம் கூட வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.





