மட்டக்களப்பில் தாயின் 8½ பவுன் தாலிக்கொடியைத் திருடி, அதனைத் தனியார் வங்கியொன்றில் 14 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்து, பணத்தைத் தனது காதலனிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய யுவதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில், தாலிக்கொடி காணாமல் போனமை தொடர்பில் அப்பாவி உறவினரான பெண் ஒருவர் மீது சந்தேகம் திருப்பப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பைச் சேர்ந்த குறித்த யுவதி தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தனது காதலனுக்குப் பணத் தேவை ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டிலிருந்த தாயின் 8½ பவுன் தாலிக்கொடியை அவர் திருடியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 28ஆம் திகதி தாலிக்கொடி காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதன்போது, வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினரான பெண் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திருடப்பட்ட தாலிக்கொடி தொடர்பான விசாரணைகளைப் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரி தீவிரப்படுத்தியதையடுத்து, சம்பவத்தின் பின்னணி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகின.
தாலிக்கொடி காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பின்னர், அதாவது ஜூன் 30ஆம் திகதி, வீட்டின் உரிமையாளரின் மகளான குறித்த யுவதி தனது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி தனியார் வங்கியொன்றில் தாலிக்கொடியை 14 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்துள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, நவம்பர் 23ஆம் திகதி கைது செய்யப்பட்ட யுவதியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, அடகு வைத்துப் பெற்ற 14 இலட்சம் ரூபா பணத்தை அன்றைய தினமே மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து தனது காதலனிடம் ஒப்படைத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாயின் நம்பிக்கையைச் சிதைத்ததுடன், உறவினரான பெண் ஒருவர் மீது திருட்டுக் குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டு அவர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டமை தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட யுவதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் மட்டக்களப்பு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





