தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினால் முன்னெடுக்கப்படவுள்ள விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நாளை (09) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
டெங்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 74 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளை இலக்காகக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் கீழ், சம்பந்தப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளின் ஒருங்கிணைப்புடன் கூட்டு டெங்கு பரிசோதனைக் குழுக்கள் களத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளன.
மேலும், உரிமையாளர்கள் அற்ற காணிகளில் காணப்படும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அடையாளம் கண்டு அழித்தல், சுற்றுப்புறங்களைத் தூய்மைப்படுத்துதல், பாடசாலைகள், பிரிவேனாக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்ட விசேட துப்புரவுப் பணிகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், விசேட கட்டுப்பாட்டு அறையொன்றின் ஊடாக இவ்வாரத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தினசரி கண்காணிக்கப்படவுள்ளன.
இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவுடன் இணைந்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, 'க்ளீன் ஸ்ரீலங்கா' (Clean Sri Lanka) செயலகம், இலங்கைப் பொலிஸ், முப்படையினர் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இணைந்து செயற்படவுள்ளன.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றி, நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் அனைவரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும்.





