மட்டக்களப்பு மாமாங்கத்தில் குரங்குகள் அட்டகாசம்! 5 பேர் படுகாயம் – அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கும் மக்கள்!

 



மட்டக்களப்பு மாமாங்கம் குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவியுள்ள குரங்குகளின் தாக்குதலுக்கு இலக்காகி இதுவரை ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களாக குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ள குரங்குகள், வீடுகளின் தோட்டங்களில் காணப்படும் மா, பலா, கொய்யா, மாதுளை உள்ளிட்ட பயன்தரு மரங்களின் பழங்களைச் சேதப்படுத்தி உண்பதுடன், வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் சீமெந்துத் தகடுகளையும் உடைத்து சேதப்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனைவிட, குரங்குகள் மனிதர்களையும் தொடர்ந்து அச்சுறுத்தி தாக்கி வருவதால், பகல் வேளையில்கூட வீடுகளின் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அச்சத்துடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குப் பலமுறை கொண்டு சென்றும் இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, பொதுமக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து தலையிட்டு, குரங்குகளின் தொல்லையிலிருந்து மக்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.