லக்ஸம்பேர்க்கில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான சமையல் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சமையல் அணியினர் 33 விருதுகளை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டியில் இலங்கை அணி 6 தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள் மற்றும் 5 டிப்ளோமா விருதுகளைப் பெற்றுள்ளது.
ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 55 நாடுகளின் அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் சுமார் 2,500 சமையல் கலைஞர்களும் ஏனைய பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை அணியின் உத்தியோகபூர்வ விமானப் பங்காளராக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செயற்பட்டது. இதேவேளை, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு சமையல் கலைஞர்களும் இப்போட்டியில் 3 வெள்ளிப் பதக்கங்களையும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
இலங்கை அணியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் 35,000 அடி உயரத்தில் கேக் வெட்டி கொண்டாட்ட நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச அரங்கில் இலங்கையின் சமையல் திறமையை வெளிப்படுத்தி நாட்டுக்குப் பெருமை சேர்த்த சமையல் அணியினருக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளது.





