இலங்கையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் முகாமைத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு 281 புதிய சுற்றுச்சூழல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்காகக் கிடைக்கப்பெற்ற 14,000 விண்ணப்பங்களில் இருந்து, அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று (25) சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.
மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு இறுதியாக 2017ஆம் ஆண்டே சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இவ்வாறான அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் ஒரே தடவையில் இறுதியாக 1997ஆம் ஆண்டே ஆட்சேர்ப்பு செய்யப்பட்டிருந்தனர்.
அந்த வகையில், 29 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஒரே தடவையில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமை அலுவலகம், மாகாண அலுவலகங்கள் மற்றும் மாவட்ட அலுவலகங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மனித வளத்தை வலுப்படுத்துதல், களப்பணிகளை மேலும் வினைத்திறனுடனும் பயனுறுதியுடனும் முன்னெடுத்தல், சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதை வலுப்படுத்துதல் ஆகியன எதிர்பார்க்கப்படுகின்றன.
மேலும், தேசிய சுற்றாடல் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்படும் புதிய சுற்றுச்சூழல் சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மனித வளத்தை உறுதிப்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை வகுப்பதுடன், அவற்றை நடைமுறையில் அமுல்படுத்துவதற்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பு மற்றும் மனித வளங்களை வலுப்படுத்துவதும் முக்கிய பொறுப்பாகும் என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரச சேவையில் இன்று இணைந்துகொண்ட அனைத்து புதிய சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டதுடன், நாட்டின் சுற்றுச்சூழலையும் எதிர்காலத் தலைமுறையினரின் மரபுரிமையையும் பாதுகாக்கும் வகையில் நேர்மையுடனும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





