சுகாதார சேவையின் மனிதவள ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், நான்கு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) காலை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது, அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 36 பேருக்கும், களஞ்சியக் காப்பாளர் பதவிக்கு 27 பேருக்கும், சிறு சேவை மேற்பார்வையாளர் பதவிக்கு 6 பேருக்கும், சுகாதாரப் பணியாளர் உதவியாளர் பதவிக்கு 154 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் உரையாற்றிய சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிடைத்த மக்கள் ஆணையின் இரண்டாவது ஆண்டு நிறைவில், புதிய அதிகாரிகள் அரச சேவையில் இணைவது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் சில அரச நியமனங்கள் தேர்தல் இலக்குகளையும் அரசியல் நோக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அரச சேவையின் உண்மையான மனிதவளத் தேவைகள் மற்றும் நாட்டின் பொருளாதார இயலுமை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு முறையான ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனத் தெரிவித்தார்.
அரச சேவையைத் தேவையற்ற வகையில் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்குச் சுமையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுகாதார அமைச்சின் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது மருந்துப் பற்றாக்குறையுடன், சுகாதாரத் துறையின் மனிதவளப் பற்றாக்குறையும் பாரிய சவாலாக இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். சில பதவிகளுக்கு 6 - 7 ஆண்டுகளாக ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயங்களின்போது, மருத்துவர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கான பற்றாக்குறை தொடர்பில் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்குத் தீர்வுகாணத் தேவையான அனுமதிகளைப் பெற்று, அனுமதி வழங்கப்பட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.





