இளம் எழுத்தாளர்களின் 22 நூல்கள் டிசம்பரில் வெளியீடு! 'சிஹினயட்ட பியபத்' திட்டத்தின் கீழ் 15 சிங்களம், 07 தமிழ் நூல்கள் தெரிவு

 


இளம் எழுத்தாளர்களின் முதலாவது நூல்களை வெளியிடுவதற்கு ஊக்கமும் ஆதரவும் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 'சிஹினயட்ட பியபத்' (Sihinayata Piyapath) திட்டத்தின் கீழ், அச்சிடுவதற்காக 22 நூல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள், அனுபவமிக்க எழுத்தாளர்களைக் கொண்ட நடுவர் குழுவினால் மதிப்பீடு செய்யப்பட்டன. இதற்கமைய, 15 சிங்கள மொழி நூல்களும் 07 தமிழ் மொழி நூல்களும் அச்சிடுவதற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

கவிதை, நாவல் மற்றும் சிறுகதை ஆகிய மூன்று இலக்கியப் பிரிவுகளின் கீழ் இந்நூல்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெரிவு செய்யப்பட்ட நூல்களை அச்சிடுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், நேற்று (16) இளைஞர் விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க தலைமையில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் வருணசிறி தனபால உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள், திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளம் எழுத்தாளர்கள் மற்றும் நடுவர் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, நூல்களை அச்சிடுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய கையெழுத்துப் பிரதிகளைச் செம்மைப்படுத்துதல், மெய்ப்புப் பார்வை, பக்க வடிவமைப்பு மற்றும் அட்டைப்பட வடிவமைப்பு உள்ளிட்ட பணிகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், தமது படைப்புகளை நூல்களாக வெளியிடுவதற்குத் தயார்படுத்தும் போது அவசியமான தொழில்நுட்ப மற்றும் படைப்பாக்க ரீதியிலான திருத்தங்கள் குறித்து, நடுவர் குழுவிலுள்ள அனுபவமிக்க நிபுணர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பும் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இளம் தலைமுறையினரின் இலக்கியப் படைப்புகளுக்கு உரிய களத்தை உருவாக்குவதுடன், புதிய எழுத்தாளர்கள் தமது முதலாவது நூலை வாசகர்கள் மத்தியில் கொண்டுசெல்லத் தேவையான நிதி மற்றும் நிறுவன ரீதியான ஆதரவை வழங்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

தெரிவு செய்யப்பட்ட 22 நூல்களையும் அச்சிடுவதற்கான ஏற்பாடுகள் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களுடன் இணைந்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நூல்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் எழுத்தாளர்களின் படைப்புலகப் பயணத்திற்கு வழிகாட்டும் இத்திட்டம், புதிய இலக்கியப் படைப்பாளர்களை உருவாக்குவதற்கான முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.