2025/2026 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தி திறன் போட்டியில், கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம் சாதாரண தரம் வரையிலான அரச பாடசாலைகள் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பிரமாண்டமான விருது வழங்கும் விழாவில், நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம், பாடசாலை அதிபர் திருமதி ஜெயா மாணிக்கவாசன் தலைமையிலான குழுவினர் இவ்விருதைப் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, கிளிநொச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்ப்பதுடன், மாகாண எல்லைகளைக் கடந்து தேசிய அளவிலும் தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இதற்கு முன்னரும் சிறந்த சுற்றுச்சூழல் பாடசாலைக்கான விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் பலவற்றை வென்றெடுத்த பெருமை அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்திற்குக் உண்டு.
பாடசாலையின் அதிபரின் தூரநோக்குச் சிந்தனையிலான சிறந்த தலைமைத்துவம், அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, மாணவர்களின் தீவிரப் பங்களிப்பு, அத்துடன் பெற்றோர் மற்றும் கிராமியச் சமூகத்தின் தொடர்ச்சியான பேராதரவு ஆகியவையே அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயம் தேசிய மட்டத்தில் தொடர்ச்சியாக முன்னிலையில் திகழ்வதற்குக் காரணம் எனப் பாடசாலைச் சமூகம் பெரும்மிதத்துடன் குறிப்பிடுகிறது. இத்தகைய கூட்டு முயற்சியும் ஒற்றுமையுமே இமாலய சாதனைகளுக்கு வித்திட்டுள்ளதாக அவர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.





