கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி.

 


இடைக்கால பருவக்காற்றின் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை (6) பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, கொழும்பில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மத்துகமவில் 95 மில்லிமீற்றரும், பதுரலியவில் 84 மில்லிமீற்றரும் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசலும் உருவாகியுள்ளது.

கொள்ளுப்பிட்டி முதல் காலி வீதி வரையான பகுதிகள், பொரளை, மருதானை, ஆமர் வீதி உள்ளிட்ட கொழும்பின் முக்கிய வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுப் பகுதிகளுக்கு அருகிலும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. நாவலப்பிட்டி நகரிலுள்ள பேருந்து நிலையம் மற்றும் நாவலப்பிட்டி - கண்டி பிரதான வீதியின் சுமார் ஒரு கிலோமீற்றர் பகுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், கொழும்பில் பெய்த கனமழையால் கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையிலான சமிக்ஞை கட்டமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிற்பகல் வேளையில் அனைத்து ரயில் வழித்தடங்களிலும் சேவைகள் பெரும் தாமதத்தை எதிர்கொண்டன.

நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வீதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளநிலைமையைக் கருத்தில் கொண்டு, சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துவதுடன், முடிந்தவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும், நாட்டின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால், அவற்றினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.