சாவகச்சேரியில் கோர விபத்து: தந்தையும் 10 வயது மகனும் உயிரிழப்பு; மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதி கைது!




யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் தந்தையும் அவரது 10 வயது மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையையும் மகனையும், அதிவேகமாக வந்த KDH ரக வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தின் தாக்கத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தை ஏற்படுத்திய KDH வாகனத்தில் பயணித்த சாரதி உள்ளிட்டவர்கள் சம்பவத்தைத் தொடர்ந்து வாகனத்தைக் கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறித்த வாகனத்தில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் பொதுமக்கள் தமது எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியதுடன், தப்பியோடியவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கோரி சாவகச்சேரி பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி மதுபோதையில் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறுதல் போன்ற பொறுப்பற்ற செயல்களால் அப்பாவி உயிர்கள் பறிபோகும் சம்பவங்கள் தொடர்வது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் சிறுவனும் உயிரிழந்துள்ள இச்சம்பவம் யாழ்ப்பாண மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.