போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் சொந்த நிதியில் 100 கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!

 



“மக்களது வரிப்பணம் மக்களுக்கே” என்ற தொனிப்பொருளில் மக்கள் நலன் சார்ந்த திட்டம் முன்னெடுப்பு!

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் “மக்களது வரிப்பணம் மக்களுக்கே” என்ற தொனிப்பொருளுக்கு அமைவாக, சபையின் சொந்த நிதி ஒதுக்கீட்டின் கீழ் கர்ப்பிணித் தாய்மாருக்கான போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் திட்டம் இன்று (18) முன்னெடுக்கப்பட்டது.

போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளர் வி. மதிமேனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு, பிரதேச சபையின் சுகாதாரப் பிரிவின் ஊடாக மக்கள் நலன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் 10 வட்டாரங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 100 கர்ப்பிணித் தாய்மாருக்கு முதற்கட்டமாக இப்போசாக்கு உணவுப் பொதிகள் சபையின் சொந்த நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் உப தவிசாளர், உறுப்பினர்கள், செயலாளர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கர்ப்பிணித் தாய்மாருக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், மக்கள் நலன் சார்ந்த இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த தவிசாளர்,

இலங்கையில் பிறப்பு வீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், தமிழ் மக்களின் பிறப்பு வீதமும் மிகவும் கவலைக்கிடமான நிலையை அடைந்துள்ளது. தமிழ் மக்களாகிய நாம் பிறப்பு வீதத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயச் சூழலில் இருக்கின்றோம்.

அந்த வகையில், போரதீவுப்பற்றுப் பிரதேச சபையினால் எமது மக்களின் அனைத்துத் தேவைகளையும் முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாவிட்டாலும், மக்களின் நலனையும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்திற்கொண்டு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

தற்போது வழங்கப்படும் போசாக்கு உணவுப் பொதிகளுடன் எமது மக்கள் நலன் சார்ந்த பணிகள் முடிவடைவதில்லை. உங்கள் பிள்ளைகள் பிறந்த பின்னர், எமது பிரதேச சபையின் கீழ் இயங்கும் பாலர் பாடசாலைகளில் அவர்களுக்கான முன்பள்ளிக் கல்வியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கும் திட்டங்களும் நடைமுறையில் உள்ளன. எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், வட்டாரங்களிலுள்ள பொதுநூலகங்களை மின்னூலகங்களாக மாற்றும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

நகர்ப்புறங்களில் கிடைக்கின்ற வசதி வாய்ப்புகளைப் போன்றே எமது கிராமப்புறப் பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் வெளிநாட்டுத் தூதரகங்களுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் எனத் தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தை மக்களின் நலனுக்காகவே பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்தகைய திட்டங்கள், பிரதேசத்தின் சமூக நலன் மற்றும் எதிர்காலத் தலைமுறையின் மேம்பாட்டில் பிரதேச சபை கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்துகின்றன.