“அகிலத்தில் அணையாத ஜோதியே கல்வி” என்று கூறினார் சோக்கிரட்டீஸ்.
இந்த உலகில் அணையாது சுடர்விட்டுப் பிரகாசிக்க வைக்கும் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி வருபவர்கள் ஆசிரியர்கள்தான். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஒரு விளக்கில் எண்ணெய் இருந்து, திரி இருந்தாலும் அதனால் எரிய முடியாது. இன்னுமொரு சுடரைக் கொண்டுதான் அந்த விளக்கை ஏற்றி ஒளிரச் செய்ய முடியும். அந்த ஏற்ற உதவிய சுடர்தான் ஆசிரியர். எனவே, மாணவர்களைச் சுடர்விட்டு எரிந்து பிரகாசிக்க வைக்கும் முழுப் பொறுப்பும் ஆசிரியர்களுக்கே உரியதாகும்.
பெற்றோர் தவறு செய்தால் குடும்பம் பாதிக்கப்படும். மாணவன் தவறு செய்தால் அவனது வாழ்க்கை பாதிக்கப்படும். ஆனால், ஆசிரியர் தவறு செய்தால் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படும். “இன்றைய இளைஞர்களே நாளைய நாட்டின் தலைவர்கள்.” அந்த இளைஞர்களைச் சரியான முறையில் செதுக்கி, நல்லவர்களாக மாற்றி உருவாக்குபவர் ஆசிரியரே ஆவார். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குரவர்கள் குறிப்பிடும்போது, தெய்வத்திற்கு முன்னால் குருவாகிய ஆசிரியர்களே வைக்கப்பட்டுள்ளனர்.
எனவே, அறிவுச் சுடரைக் கொண்டு அறியாமை இருளை அகற்றும் ஆசிரியர்கள், நவீன உலகிற்கு முகம் கொடுக்கக்கூடிய சவால்களை எதிர்கொண்டு, அவற்றுக்குத் தீர்வு கண்டு வாழக்கூடிய நேர்மறைச் சிந்தனையுள்ள மாணவர்களை உருவாக்க வேண்டும். சமூக மாற்றத்திற்கு ஏற்ப ஆசிரியர்களும் மாறிக்கொண்டு, தேடலில் ஈடுபட்டு, தம்மைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமூக வலைத்தளங்களின் தவறான தாக்கங்களுக்கு உள்ளாகும் மாணவர்களை அதிலிருந்து விடுவித்து, கல்வி வட்டத்திற்குள் உள்வாங்குவதுடன், நவீன தொழில்நுட்பங்களையும் உரிய வழிமுறைகளையும் கண்டறிந்து மாணவர்களிடையே நடைமுறைப்படுத்த வேண்டும்.
“ஆசிரியர் உஷாராக இருந்தால் மாணவரும் உஷாராவார்.” “ஆசிரியர்கள் தூங்கினால் மாணவர்களும் தூங்கிவிடுவார்கள்.” “அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி” என்ற காலம் போய், “ஆசிரியர் எவ்வழியோ மாணவரும் அவ்வழி” என்ற நிலை உருவாகியுள்ளது. இதனை ஒவ்வோர் ஆசிரியரும் அடிக்கடி சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
வேதனையைக் கருத்தில் கொண்டு, விடுமுறை, ஓய்வு போன்றவற்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஒருவர் ஆசிரியர் தொழிலைத் தேர்ந்தெடுப்பாராக இருந்தால், அத்தகைய ஆசிரியர் பொருத்தமற்றவரே ஆவார். அத்தகைய ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தேவையில்லை. அன்போடு இணைந்த கண்டிப்பைக் கொண்ட ஆசிரியர்களே இருக்க வேண்டும்.
அலெக்சாண்டர் அவர்களிடம், “எப்படி நீங்கள் இந்த உலகத்தை வென்றீர்கள்?” என்று கேட்டபோது, அவர் கூறிய பதில்: “உலகிற்கு நான் வரக் காரணம் எனது பெற்றோர். உலகம் என்னிடம் வரக் காரணம் எனது ஆசிரியர் அரிஸ்டாட்டில் அவர்களே” என்பதாகும். இதிலிருந்து ஆசிரியர் சேவையின் மகத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
“கற்கை நன்றே, கற்கை நன்றே, பிச்சை புகினும் கற்கை நன்றே” என்று உலக நீதியில் அதிவீரராமபாண்டியன் கூறிய கருத்தை வலியுறுத்திக் காட்டி, ஆசிரியர்கள் மாணவர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.
“இன்று புத்தகத்தைத் தலைகுனிந்து படித்தால், நாளை தலைநிமிர்ந்து வாழ முடியும்” என்ற கல்வி பற்றிய ஆழமான கருத்தை மாணவர்களுக்கு எடுத்துக்கூற வேண்டியது ஆசிரியரின் கடமையாகும்.
“படிக்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நன்று” என்று பிளேட்டோ கூறியுள்ளார்.
ஒரு மரத்தின் வேர் ஆசிரியர்; அதில் பூக்கும் பூக்கள் மாணவர்கள். வேர் பட்டால் பூக்கள் கொட்டிவிடும். அதுபோல, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மாணவர்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைகிறது.
ஒரு வகுப்பறையானது தாயின் கருவறையைப் போன்று அமைய வேண்டும். கருவாக உருவான குழந்தை கருவறையில் எவ்வாறு வளர்கிறதோ, அவ்வாறே வகுப்பறையிலும் பிள்ளைகள் வளர்கிறார்கள். எனவே, வகுப்பறையை ஆரோக்கியமான சூழல்கொண்ட இடமாக மாற்றி அமைப்பது ஆசிரியர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.
ஒரு பாடசாலையில் அடிக்கப்படும் இரண்டு மணிச்சத்தங்கள் முக்கியமானவை. ஒன்று பாடசாலை ஆரம்பிக்கும்போது அடிக்கப்படும் மணிச்சத்தம்; மற்றையது பாடசாலை முடிவடையும்போது அடிக்கப்படும் மணிச்சத்தம்.
பாடசாலை முடிவடையும்போது அடிக்கப்படும் மணிச்சத்தத்தைக் கேட்டு மாணவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியுடன் வீடு செல்ல விரும்புகிறார்களோ, அதேபோன்று பாடசாலை ஆரம்பிக்கும்போது அடிக்கப்படும் மணிச்சத்தத்தையும் மாணவர்கள் மகிழ்ச்சியுடனும் விருப்பத்துடனும் வரவேற்கும் இடமாகப் பாடசாலையை மாற்ற வேண்டும். அதனைச் சாத்தியமாக்கும் கருத்தாக்கங்களைக் கொண்டவர்களாக ஆசிரியர்களே விளங்குகின்றனர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உலக ஆய்வொன்று அண்மையில் வெளியிட்ட தகவலின்படி, பத்து உயர் அதிகாரிகளிடம் அவர்களுடைய முன்மாதிரி யார் என்று கேட்கப்பட்டபோது, அவர்களில் எட்டுப் பேர் அளித்த பதில் ஆசிரியரே என்பதாகும். எனவே, ஏணியாகவும் தோணியாகவும் இருந்து மாணவர்களை உயர்த்திக் கரைசேர்க்கும் ஆசிரியர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஆகவே, ஆசிரியர் தினத்தில் மாணவர்களைச் சுடர்விட்டுப் பிரகாசிக்கச் செய்யும் ஆசிரியர்களைப் போற்றுவோம்!





