மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல்.

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் கனிய வளங்களை முறையாகப் பயன்படுத்துதல் மற்றும் அகழ்வு நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இன்று (01) புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சுனில் ஹந்துன்னெத்தி அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மாவட்டத்தின் கனிய வளங்களைப் பாதுகாப்பதுடன், அவற்றைச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது.

கனிய வளங்கள் அகழ்வு தொடர்பான செயற்பாடுகளை மாவட்ட மட்டத்தில் முறையாக ஒருங்கிணைத்தல், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை வலுப்படுத்துதல் மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், கனிய வளங்களின் பயன்பாடு காரணமாக ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தடுப்பதற்கும், மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தித் தேவைகளுக்கு ஏற்ப வளங்களைப் பாதுகாப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் கருத்துக்களை முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கங்கள் பணியகத்தின் உயர் அதிகாரிகள், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கனிய வளங்களைப் பாதுகாத்து, பொறுப்புடன் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மாவட்டத்தின் நிலையான அபிவிருத்தியையும் உறுதிப்படுத்துவதுடன் சட்ட விரோத கனிய வளங்களின் அகழ்வை தடுப்பதற்கு இக்கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.