இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர்மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.

 


இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு வைபே டி போயர் (H.E. Wiebe DE BOER) உள்ளிட்ட பிரதிநிதிகள் நேற்று (02) மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களைச் சந்தித்த தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.

குறிப்பாக, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஆதரவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நட்புறவு ரீதியான கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் தனித்துவமான வரலாற்று மற்றும் சமூக அம்சங்கள் தொடர்பாகவும் தூதுவர் கேட்டறிந்தார். குறிப்பாக, டச்சுக் காலத்து வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் பறங்கி சமூகத்தினர் தொடர்பான விடயங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நெதர்லாந்து இராச்சியத்தின் தூதுவர் தெரிவித்தார்.

இச்சந்திப்பின் நினைவாக நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன், மாவட்ட விவசாயப் பணிப்பாளர் ஆர். சிவநேசன், அனர்த்த முகாமைத்துவப் பிரதி பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத் மற்றும் மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.