தற்போதைய அரசாங்கத்தின் திட்டத்தின்க கீழ் ஜனாதிபதியின் தலைமையில் தொழில்முறை பொலிஸ் சேவை ஒன்றையும் தொழில்முறை பொலிஸ் அதிகாரியையும் உருவாக்க முடிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
85 ஆவது பொலிஸ் தடகள விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், பொலிஸ் சேவையின் தரமான வளர்ச்சிக்கு ஏற்ப பொலிஸ் சீருடையை புதிய தோற்றத்தில் வடிவமைப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
மேலும், வரவிருக்கும் ஆண்டில் பொலிஸ் சேவைக்கு மேலும் 10,000 அதிகாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடந்த 5 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த அனைத்து பதவி உயர்வுகளும் சிரேஷ்டத்துவம், பணித்திறன், திறமைக்கான எல்லைக் கோடுகள் மற்றும் பரீட்சை முறைகளின் அடிப்படையில் இந்த ஆண்டிற்குள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
கீழ்நிலை முதல் உயர்நிலை வரையிலான அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் தராதரம் பாராது வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்குவதற்கான வழிமுறை தயாரிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கான அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் சிறப்பு அபாயக் கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆனந்த விஜேபால இங்கு தெரிவித்தார்.





