மட்டக்களப்பு சித்தாண்டியில் மனைவி கத்தியால் குத்திக் கொலை – மாமியார் வீட்டில் அதிர்ச்சி சம்பவம்

 



மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் கணவனின் தாயாரிடம் முறையிடுவதற்காக சென்ற 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய், கணவனால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (24) மாலை இடம்பெற்றுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மாவடிவேம்பு ஆர்.டி.எஸ். வீதியைச் சேர்ந்த தங்கராசா பிரதீபா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருவதாவது,

கூலி தொழிலாளியான கணவர் மதுபானத்திற்கு அடிமையாகி, தினமும் மதுபானம் அருந்திய பின்னர் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டிருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பவ தினமான இன்று மனைவியின் கையடக்கத் தொலைபேசியை கணவன் எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதுடன், அதன்மூலம் பெற்ற பணத்தில் மதுபானம் வாங்கி அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கணவன், மனைவிக்கிடையே நீண்ட நேரமாக வாக்குவாதமும் தகராறும் இடம்பெற்றுள்ளது.

இதனால் வீட்டிலிருந்து வெளியேறிய பிரதீபா, சித்தாண்டி கலைமகள் வீதியில் வசிக்கும் தனது கணவனின் தாயாரிடம் சென்று, கணவனின் நடவடிக்கைகள் தொடர்பில் முறையிடுவதற்காக சென்றுள்ளார்.

எனினும், அவரை பின்தொடர்ந்து சென்ற கணவன், தனது தாயாரின் வீட்டிலேயே வைத்து மனைவியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது, கணவன் கத்தியால் மனைவியின் கழுத்தில் குத்தியதாகவும், இதில் படுகாயமடைந்த பிரதீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில், மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ததாகக் கூறப்படும் கணவன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான கணவனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சந்திவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.