ஒரே நாளில் திருமணம்... ஒரே நாளில் பிரசவம்! இரட்டை சகோதரிகளின் வாழ்க்கையில் நிகழ்ந்த அபூர்வ சம்பவம்

 


இந்தியாவின் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவஞ்சூரைச் சேர்ந்த அனில்குமார் – சூர்யா தம்பதியின் இரட்டை மகள்களான ஆதிரா மற்றும் ஆர்யா ஆகியோரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள அபூர்வ சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

25 வயதுடைய சகோதரிகளான இருவரும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்ந்ததுடன், கல்வியிலும் ஒரே பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். இருவரும் செவிலியர் பயிற்சியை நிறைவு செய்து, ஐதராபாத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பணியாற்றியுள்ளனர்.

இதன் பின்னர் அவர்களது திருமணமும் ஒரே நாளில் நடைபெற்றுள்ளது.

2022ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வில், கருவற்றா பகுதியைச் சேர்ந்த அகிலேஷ் குமாரை ஆதிராவும், மாவேலிக்கரையைச் சேர்ந்த சிரன் மோகனனை ஆர்யாவும் திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்குப் பின்னர் இருவரும் தங்களது கணவர்களுடன் வெளிநாடுகளுக்குச் சென்று, தாதியர் பணியில் தொடர்ந்துள்ளனர். ஆதிரா கட்டார் தோஹாவில் உள்ள கிளினிக்கொன்றிலும், ஆர்யா ஓமானில் உள்ள வைத்தியசாலையொன்றிலும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில், சகோதரிகள் இருவரும் ஒரே காலகட்டத்தில் கர்ப்பம் தரித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 9ஆம் திகதி, சில மணி நேர இடைவெளியில் இருவரும் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். இரட்டையர்களாக பிறந்த சகோதரிகள், பல ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களது மகப்பேற்றிலும் இவ்வாறு நெருக்கமான ஒற்றுமையைப் பகிர்ந்துகொண்டது குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வில் பங்கேற்பதற்காக, இரு சகோதரிகளும் தங்களது கணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கடந்த 20ஆம் திகதி சொந்த ஊரான திருவஞ்சூருக்கு திரும்பியுள்ளனர்.

இதன்போது ஆர்யா – சிரன் மோகனன் தம்பதியினர் தங்களது மகளுக்கு நிதாரா எனவும், ஆதிரா – அகிலேஷ்குமார் தம்பதியினர் தங்களது மகளுக்கு நிவேத்யா எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

இரட்டையாக பிறந்த சகோதரிகள், ஒரே நாளில் திருமணம் செய்து, பல ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரே நாளில் சில மணி நேர இடைவெளியில் தலா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள சம்பவம், அவர்களது குடும்பத்தினரிடையே மட்டுமன்றி சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாகியுள்ளது.