"அனோஜனுக்கு கருணை காட்டுவோம்" - மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டை!!

குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியாவிற்கு தொழில் நிமிர்த்தம் சென்ற அனோஜனிற்கு அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் "அனோஜனுக்கு கருணை காட்டுவோம்"  எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து வேட்டையென்று இன்று (26) திகதி மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.


அனோஜனின் விவகாரத்தை இலங்கை அரசாங்கம் மிகுந்த சிரத்தையுடன் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துவரும் நிலையில் அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அனோஜனுக்கு கருணைகாட்டுமாறு கோரியே மட்டக்களப்பு நகரில் இக்கையெழுத்து போராட்டத்தை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் கலாநிதி உ.உதயகாந்த் தலைமையில் அதன் செயலாளர் தேசிய ஜோதி ரீ.லெட்சுமிகாந்தனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. 

அனோஜன் சவுதி அரேபியாவில் அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் எனும் அடிப்படையில்,  அவரது உயிரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் முன்னின்றி செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த வகையில் நாடு பூராகவும் இவருக்கு ஆதரவான பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறுபட்ட சமூக செயற்பாடுகளையும், மனிதாபிமான பணிகளையும் முன்னெடுத்து வரும் சமூக மட்ட அமைப்பு என்றவகையில் "அனோஜனுக்கு கருணை காட்டுவோம்"  எனும் தொனிப்பொருளில் சவுதி மன்னருக்கும், எமது இலங்கை நாட்டின் அதிபருக்கும் வழங்கி வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜரிற்கு கையெழுத்து சேகரிப்பினை முன்னெடுக்க நடவடிக்கை அடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவரும், சமூக செயற்பாட்டாளரும் அகில இலங்கை சமாதான நீதவானும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான கலாநிதி உ.உதயகாந்த் (JP)  இந்த விடையம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். 

அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மனிதாபிமான செயற்பாடுகளிற்கு ஒரு போதும் பின்னிற்பவர்கள் அல்ல என தெரிவித்திருந்தார். 

இம் மாபெரும் கையொழுத்து சேகரிப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், சர்வ மத தலைவர்கள், சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக உறுப்பினர்கள், மீயுயர் குழு உறுப்பினர்கள், தொகுதிகளுக்கான பிரதான இணைப்பாளர்கள், பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதான இணைப்பாளர்கள், இணைப்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், சர்வமத அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விளையாட்டு கழக பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனோஜனிற்காக கருணை கோரும் மனுவில் கையொப்பமிட ஆர்வமாய் இருக்கின்ற சமூகப் பற்றாளர்கள் என பலரும் மனித நேயம்மிக்க இக் கைங்கரியத்தில் பங்கேற்று தமது கையாப்பங்களை ஈட்டிருந்தனர்.

இதன் போது 5000 கையெழுத்துக்களை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் சேகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.