மட்டக்களப்பில் 2008-இல் T-56 துப்பாக்கியால் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில், 'பிள்ளையான்' என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் இருவர் ஆகியோரின் விளக்கமறியலை செப்டம்பர் 15ஆம் திகதி வரை நீட்டித்து மட்டக்களப்பு பதில் நீதவான் இன்று (01) உத்தரவிட்டார். சிறைச்சாலையிலிருந்து இணையவழி (Zoom) வாயிலாக சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2008-ஆம் ஆண்டு கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை, காத்தான்குடியில் TMVP உறுப்பினர் உட்பட இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டமை மற்றும் வவுணதீவில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தீவிர விசாரணை நடத்தி வந்தது. இந்த 5 படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இராணுவ புலனாய்வுத் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகிய மூவரையும் 2025 நவம்பரில் CID அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட இம்மூவருடன் லண்டனில் வசிக்கும் 'முகமட் பாய்ஸ்' என்பவரையும் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு எதிராக கடந்த 2026 ஜூன் 17 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இன்றைய விசாரணையின்போது சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்த பதில் நீதவான், லண்டனில் தலைமறைவாக இருக்கும் 'முகமட் பாய்ஸ்' என்பவருக்கு எதிரான திறந்த பிடியாணையை (Open Warrant) மீண்டும் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தார்.





