முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் ஆராய்வு
பிணை வழங்கும் நடைமுறைச் சட்டத் திருத்தங்கள்
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்பிற்கே பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த நிலைமை தொடர்ந்தும் மோசமடைந்து வருவதைக் கருத்திற்கொண்டே போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது தொடர்பில் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய செயற்பாட்டு சபை நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடியபோதே இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்படும் வரம்பற்ற செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள குற்றச்செயல் சூழல், தற்போது தேசிய பொருளாதாரம், சுற்றுலாத்துறை மற்றும் சமூக ஒழுக்க விழுமியங்களுக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பில் அச்சப்படும் சமூகத்தை பாதுகாப்பதற்கு கடுமையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டது.ஒட்டுமொத்த சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைத்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை பலியாக்கி வரும் நச்சுப் போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிப்பதற்காக, நாட்டில் நடைமுறைச் செயற்பாடுகளையும் துரித சிந்தனை மாற்றத்தையும் ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.
இதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் செயற்பாட்டுப் பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.இந்த தேசிய பேரழிவின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, நிறுவன கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் நடைமுறையுடன் தொடர்புடைய சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இறுதிக் கட்டத்தில் உள்ள நிலையில், அவற்றைத் துரிதமாக வர்த்தமானியில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போதைப்பொருள் வழக்குகள் தாமதமடைவதற்கு காரணமாக அமைந்துள்ள இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வெளியிடும் செயன்முறை கணிசமாக துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகள் தாமதமடைவதால் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவிற்கு ஏற்ப (5 கிராமுக்குக் குறைவாக, 10 கிராமுக்கும் குறைவாக என) துல்லியமான தரவு வகைப்பாட்டைச் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைத் திணைக்களம் ஆகியவற்றுக்கிடையில் முறையான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, பகுப்பாய்வு அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான முறையான வேலைத் திட்டத்தைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கொள்ளளவை அதிகரிப்பது மற்றும் அதன் வசதிகளை விரிவுபடுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு கேட்டறிந்த ஜனாதிபதி இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெறுவதற்கு கடற்படையின் உதவி பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.பாதுகாப்பு கெமரா கட்டமைப்பைப் பொருத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்வதற்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயேஷா ஜினசேன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும், பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். சிறைச்சாலைகளில் தற்போது நிலவும் நிலைமை தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், அண்மையில் நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஏற்பட்ட சொத்துச் சேதம் 255 மில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. சிறைக்கைதிகள் குழப்பகரமான வகையில் செயற்படுவதைக் குறைப்பதற்காக அதிகளவில் மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், 2007ஆம் ஆண்டின் 54ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சட்ட வரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியில் இணைத்து நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
பாடசாலை கட்டமைப்பில் போதைப்பொருள் பரவுவதைத் தடுப்பதற்காக கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து நடைமுறைப்படுத்தும் ‘மிதுரு பாடசாலை’ வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டது.





