ஒரே நாளில் 400-க்கும் மேற்பட்ட திருமணங்கள்.குருவாயூர் கோவிலில் புதிய சாதனை:

 





கேரளாவில் உள்ள உலகப்புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில், வரும் 23-ஆம் தேதி ஒரே நாளில் 377-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து முன்பதிவுகள் நடைபெற்று வருவதால், அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டி புதிய வரலாற்றுச் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 23-ஆம் தேதி மிகச் சிறந்த சுபமுகூர்த்த நாளாகக் கருதப்படுவதால், ஒரே நாளில் நூற்றுக்கணக்கான ஜோடிகள் குருவாயூரப்பனின் அருளோடு வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்க ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

அன்று வரவிருக்கும் பெரும் கூட்ட நெரிசலைச் சீரமைக்க குருவாயூர் தேவஸ்வம் நிர்வாகம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:

 அன்றைய தினம் எதிர்பார்க்கப்படும் பெரும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த, வழக்கமான நேரத்திற்கு மாறாக அதிகாலை 4 மணிக்கே திருமணச் சடங்குகளைத் தொடங்க கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு, விரைவாகத் திருமணங்களை நடத்த ஏதுவாக 6 பிரத்யேக திருமண மண்டபங்களை அமைத்து, கூடுதல் பணியாளர்களையும் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் நியமிக்கவுள்ளது. 

மேலும், மண்டபத்தின் அருகில் நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, ஒரு திருமணக் குழுவிலிருந்து மணமகன், மணமகள் மற்றும் ஒளிப்பதிவாளர் (Photographer) உட்பட மொத்தம் 24 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு முன்னர் கடந்த 2025 செப்டம்பர் 8-ஆம் தேதி ஒரே நாளில் 334 திருமணங்கள் நடைபெற்றதே குருவாயூர் கோவிலின் அதிகபட்ச சாதனையாக இருந்த நிலையில், தற்போது வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள திருமணங்கள் மூலம் அந்தப் பழைய சாதனை முறியடிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.