மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2026 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தின மாவட்ட மட்ட பிரதான நிகழ்வு இன்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில், 2026 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றாடல் தின மாவட்ட மட்ட பிரதான நிகழ்வு நேற்றைய தினம்(2026.06.05) தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்வருடத்திற்கான உலக சுற்றாடல் தினத் தொனிப்பொருளான "Urgent Climate Action" (அவசர காலநிலை நடவடிக்கை) என்பதனைப் பிரதிபலிக்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் திரு. T. சுந்தரேசன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வின் ஆரம்பமாக, நூற்றுக்கும் அதிகமான சுற்றாடல் முன்னோடி மாணவர்களின் பங்களிப்புடன் பிரம்மாண்டமான சுற்றாடல் விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மட்டக்களப்பு - திருமலை வீதியில் பிள்ளையாரடியிலிருந்து தன்னாமுனை வரையான ஈரநிலப் பிரதேசத்தினைப் பாதுகாக்கும் வகையிலான விசேட சிரமதான நிகழ்வும் முன்னெடுக்கப்பட்டது.
ஊர்வலத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் பிரதான அரங்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின. இதன்போது தேசியக்கொடி மற்றும் சுற்றாடல் கொடிகள் ஏற்றப்பட்டு, சுற்றாடல் முன்னோடி மாணவர்களால் தேசிய கீதம் மற்றும் சுற்றாடல் கீதம் என்பன இசைக்கப்பட்டன. இதன் முக்கிய அங்கமாக மண்டப வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு அமர்வில், சுற்றாடல் உத்தியோகத்தர்களான திருமதி. காயத்ரி சிறிவித்தியன் மற்றும் திரு. கே. லோகராஜா ஆகியோரால் மாணவர்களுக்கான விசேட சுற்றாடல் விழிப்புணர்வு முன்வைப்புகள் (Presentations) வழங்கப்பட்டன. அத்துடன், சுற்றாடல் தினத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்களின் கவிதை மற்றும் பேச்சு நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு. V. நவநீதன் அவர்கள், தற்காலத்திற்குப் பொருத்தமான விசேட சுற்றாடல் தினச் சிறப்புரையினை ஆற்றினார்.
இவ்வுலக சுற்றாடல் தின மாவட்ட மட்ட நிகழ்வில் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர், சுற்றாடல் உத்தியோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.


































































































