நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் தொனிப்பொருளில் ஆரம்பித்து வைக்கப்பட்ட" ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் " நிகழ்வின் ஓர் அங்கமாக மண்முனைப் பற்று பிரதேச செயலக பிரிவிற்குள் 05 திட்டங்களுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு 02.06.2026 நேற்று பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு அ. சுதர்சன் பிரஜா சக்தி உறுப்பினர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மத பிரமுகர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பல்பரிமாண வறுமையினை ஒழிக்கும் பொருட்டு 25000 மில்லியன் ரூபா மக்களின் வரிப்பணத்தை கொண்டு கிராமிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தல் இதன் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த திட்டத்தின் கீழ் மண்முனை பற்று பிரதேச செயலகத்துக்கு 42.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றுள்ளதுடன்,
புதுக்குடியிருப்பில் மீன்பிடி தொழிலாளர்களுக்கான ஐஸ் பதனிடும் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட உள்ளது இதன்மூலம் கிரான் குளம் தொடக்கம் தாழங்குடா வரையான மீன்பிடி தொழிலாளர்களுக்கான ஐஸ் தேவையை நிறைவு செய்வதாக அமையும்.
பாலமுனை பிரதேசத்தில் ஒரு சிறிய தையல் நிலையம் உருவாக்கப்படவுள்ளது இதனால் தையல் வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுப்பது பிரதானமாகும்.
காங்கேயனோடை பிரதேசத்தில் மீன்பிடி தொழிலாளர்களுக்கான சந்தையை மேம்படுத்தும் வண்ணம் மீன் சந்தை ஒன்று அமைக்கப்பட உள்ளது இதனால் மீன்பிடித் தொழிலாளர்கள் நேரடியான சந்தையை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
கோவில் குளம் , செல்வா நகர் கிழக்கு பிரதேசத்தில் உள்ள கைத்தறி தொழிலாளர்களின் தொழில் வாய்ப்பினை ஊக்குவிக்கும் வண்ணம் இரண்டு கைத்தறி தொழில் நிலையங்கள் உருவாக்கப்பட இருக்கின்றன இதனால் கைத்தறி உற்பத்திகள் மேம்படுத்தப்பட்டு அவர்களின் தொழில் வாய்ப்பு மேம்படுத்தப்படும்.
இவ்வாறாக ஐந்து திட்டங்களுக்குமான முதற்கட்ட அங்குரார்பண நிகழ்வானது அனைவரும் பங்குபற்றுதலுடன் இனிதே நிறைவு பெற்றது.














