உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 102 வது துறவற தினம் இன்று (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமி ஆகும்.
1924 ஆம் ஆண்டு சித்ரா பௌர்ணமியன்று, சுவாமிகள் தனது 32 ஆவது வயதில் பண்டிதர் மயில்வாகனன் என்ற நாமத்திலிருந்து விடுபட்டு அவரது குருவான இராமகிருஷ்ண மிஷன் துறவி சுவாமி சிவானந்தர் முன்னிலையில்,காவியுடை தரித்து ‘சுவாமி விபுலாநந்தர்’ ஆகினார்.
கிழக்கின் காரைதீவு மண்ணில் 1982.03.27 ஆம் திகதி அவதரித்த சுவாமியின் வாழ்க்கையின் திருப்புமுனையான காலம் துறவறத்தின் பின்னராகும்.
மயில்வாகனன் என்ற நாமத்துடன் லண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானப் பட்டதாரியாய், மதுரைத் தமிழ்ச் சங்க பண்டிதராய் மேல்நாட்டு உடையுடன் கம்பீரமாக இருந்த கோலம் மாறி காவிஉடை தரித்து, தாமரை இலைமேல் நீர் போன்ற நிலைக்குள் வந்து துறவியாய் பிறப்பெடுத்த நாள் சித்திரா பௌர்ணமி தினத்தன்று ஆகும்.
சுவாமிகளை உலகம் போற்றும் பெருமகனாராக விளங்க வைத்தது இத்துறவுநிலை எனலாம்.
விஞ்ஞானம் படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கினார். தமிழை மூச்சாக்கி வாழ்ந்தார். சமரச சன்மார்க்கத்தின் வழியில் பயணித்தார். சைவத்தைக் கைகளில் ஏந்தினார். 23 வருட துறவு வாழ்க்கை அவரை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. துறவறத்தின் பின்னர்தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசியரானார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் தமிழ் அறிஞர்கள் பலபேர் இருந்தும்,- ஈழத்து மைந்தனை தமிழ்ப் பேராளுமையாக அண்ணாமலைச் செட்டியார் கண்டுகொண்டார்.
உலகியல் பற்றுக்களையும் அறுத்த சுவாமி மொழியில், சமயத்தில், கலாசாரத்தில், பண்பாட்டில், ஆராய்ச்சியில், சமூகத்தொண்டில், இசையில், நாடகத்தில் பற்றுக் கொண்டு வாழ்ந்தார்.
மயிவாகனன் விரும்பி இருந்தால் – அவருக்கு வாய்த்த வாய்ப்புகளைப் பயனாக்கி இல்லறத்தில் இணைந்து இகபோக இன்பங்களை இஷ்டமுடன் ஏற்றிருக்கலாம் அல்லவா ? ஆனால் அவரைக் கருவில் உருவாக்கிய அந்த ஆண்டவனே அவரை அகிலத்துக்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் – துறவுக்குள் அவர் மனத்தை நாட வைத்துவிட்டான் என்றுதானே எடுக்க வேண்டி இருக்கிறது.
இல்லறத்தில் இணைந்திருந்தால் காரைதீவின் மைந்தன் மயில்வாகனன்
குடும்பஸ்தனாகி குழந்தைகளுடன் குடித்தனம் நடத்தி சாதாரண மானவராகவே
மறைந்திருப்பார்.
ஆனால் கிழக்கின் முத்தாய் ஒளி விட்டு எல்லோர் இதயத்திலும்
பதிந்திருக்கிறார் என்றால் அதற்கு வழி வகுத்தது துறவுதான் என்பதை எவருமே
மறுத்து உரைத்திட முடியாது.
சுந்தரரை இல்லறத்தில் இணைய விடாமல் எம்பெருமான் தடுத் தாட்கொண்டார். அரச போகத்தில் இருந்த சித்தார்த்த கெளதமர் இல்லறத்தை ஒதுக்கி இறைஞானம் பெற்றார். அதே போன்ற ஒரு நிலையினையே மயில்வாகனுக்கும் கிடைத்தது எனலாம் .
எல்லாமே இறையருள் அல்லால் வேறென்றும் இல்லை என்றுதான் எண்ண வேண்டி இருக்கிறது.
ஆண்டவனின் பரிபூரணமான அனுக்கிரகத்தைக் கருவிலே தாங்கி வந்த காரணத்தால் அடிகளாகி ,ஆசானாகி, பேராளுமையாய் பிரகாசித்து பயனுற வாழ்ந்தார் எனலாம்.விஞ்ஞானம் படித்தவர் மெஞ்ஞானத்துள் மூழ்கிறார்.தமிழை மூச்சாக்கி நிற்கின்றார்.சமரச சன்மார்க்கத்தின் வழியில் பயணப்படுகிறார். ஆனால் சைவத்தைக் கைகளில் ஏந்துகிறார். இவையெல்லாம் துறவால் விளைந்த விளைவுகள் என்றே எடுத்துக் கொள்ளல் வேண்டும்.
துறவு வாழ்க்கை என்பது முத்தமிழ் வித்தகரின் பாதையில் வாய்த்த பெரும் பொக்கிஷம் என்றேகொள்ள வேண்டும்.
இவையாவும் துறவு வாழ்க்கையின் பின் துலங்கியது என்பது தான் மிகவும் முக்கியமாகும்.
இன்றைய 102 வது துறவறதினம் உலகில் தூய பற்றின்மையை வளர்க்கட்டும்.
விபுலமாமணி வித்தகர் வி.ரி. சகாதேவராஜா
ஆலோசகர் ,
சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த
பணி மன்றம், காரைதீவு





