வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும்

 


நாட்டில் நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் ஜூன் மாதம் 10ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று (07) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில்:

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காக புதிய நிறுவனம் ஒன்றுக்கு விலைமனு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி அந்த நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.

அதற்கமைய, ஜூன் மாதம் 10ஆம் திகதிக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை அந்த நிறுவனத்தினால் மீள ஆரம்பிக்க முடியும் என பிரதி அமைச்சர் உறுதிப்படத் தெரிவித்தார்.