ஹபரணை - பொலன்னறுவை பிரதான வீதியில் கோர விபத்து.

 


ஹபரணை - பொலன்னறுவை பிரதான வீதியில் மின்னேரியா வனவிலங்கு அலுவலகத்திற்கு அருகில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 7 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று, வீதியில் பழுதடைந்து நின்ற பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முயன்ற போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது எதிரே வந்த அறுவடை இயந்திரத்தை ஏற்றிச் சென்ற டிராக்டருடன் பேருந்து நேருக்கு நேர் மோதியுள்ளது.

பேருந்தில் பயணித்த 4 ஆடைத்தொழிற்சாலை பெண் ஊழியர்களும், டிராக்டரில் இருந்த 3 பேரும் காயமடைந்துள்ளனர்.

பேருந்தின் முன் இருக்கையில் பயணித்த பெண் ஊழியர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள நிலையில் அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் ஹபரணை, தம்புள்ளை மற்றும் பொலன்னறுவைவைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என ஹபரணை காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.