ஐக்கிய அரபு இராச்சியம் மீதான ஈரானியத் தாக்குதல்களின்போது இலங்கையர் உட்பட 58 பேருக்கு காயம்.

 

 


ஐக்கிய அரபு இராச்சியம் மீதான ஈரானியத் தாக்குதல்களின்போது காயமடைந்தவர்களில் இலங்கையரும் அடங்குவதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
 இந்தத் தாக்குதல்களில், இதுவரை 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 2 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 541 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை தங்களது வான் பாதுகாப்பு அமைப்புகளால் இடைமறித்து அழிக்கப்பட்ட போதிலும், அவற்றின் சிதறல்கள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்ததில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 58 பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

 இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதோடு, 35 ட்ரோன்கள் நிலப்பரப்பில் வீழ்ந்ததில் சில பொதுமக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

வான் பாதுகாப்புப் படையினரால் 152 பாலிஸ்டிக் ஏவுகணைகளும், அனைத்து குரூஸ் ஏவுகணைகளும், 506 ட்ரோன்களும் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஏவுகணைகள் கடலில் வீழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ள அந்த பாதுகாப்பு அமைச்சு, அந்நாட்டில் வாழும் குடிமக்கள், புலம்பெயர் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்கு முதலிடம் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளது.