சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகப் பொலிஸ் புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு, விடுதி ஒன்றில் பெண்ணொருவருடன் தங்கியிருந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை, வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
வெலிப்பன்ன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.கே. அனுரஜித்தின் உத்தரவின் பேரில், மேலும் மூன்று அதிகாரிகளுடன் இணைந்து விசேட சோதனை நடவடிக்கைகளுக்காகச் செல்வதாகக் கூறி, மேற்படி சார்ஜன்ட் பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ பதிவுகளையும் அவர் பணிப்புத்தகத்தில் மேற்கொண்டுள்ளார்.
இருப்பினும், கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நிலையப் பொறுப்பதிகாரி மேற்கொண்ட திடீர் சோதனையின் போது, மேற்படி சார்ஜன்ட் மத்துகம - அகலவத்தை வீதியிலுள்ள விடுதி ஒன்றின் அறையில் பெண்ணொருவருடன் தங்கியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
உயர் பொலிஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பேரில், கடமை தவறியமை மற்றும் ஒழுங்கீனமான முறையில் நடந்துகொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரது பணி உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் உயர்மட்டம் முன்னெடுத்து வருகின்றது.





