புத்த சாசனத்தின் தொடர்ச்சியை
உறுதிப்படுத்துவதற்காகத் தங்களது பிள்ளைகளைத் துறவற வாழ்விற்கு (பௌத்த
பிக்குகளாக) அர்ப்பணித்த, பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள
மற்றும் சொந்தமாக வீடற்ற பெற்றோர்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதை
நோக்கமாகக் கொண்டு 'யதிவர மாபிய நிவஹன' தேசியத் திட்டம்
வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு
மத்தியிலும் தங்களது பிள்ளைகளை சாசனத்திற்கு வழங்கிய பெற்றோர்களுக்கு
கௌரவம் அளிக்கும் மற்றும் நன்றிக்கடனைச் செலுத்தும் ஒரு செயற்திட்டமாக இது
முன்னெடுக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில்
அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் 1,000 வீடுகளை நிர்மாணிக்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது வீடமைப்பு, நிர்மாணத்துறை
மற்றும் நீர்வழங்கல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் உங்களுக்கென
ஓரிடம் - அழகான வாழ்க்கை வீடமைப்புத் திட்டத்தின் ஒரு அங்கமாக இது
செயல்படுத்தப்படும்.
அடையாளம் காணப்படும் பயனாளிகளுக்குப்
புதிய வீடொன்றை அமைப்பதற்காக, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின்
தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் பரிந்துரைக்கமைய 1.5 மில்லியன் ரூபாய் (15
இலட்சம்) நிதி உதவி வழங்கப்படும்.
வீடுகளை நிர்மாணிப்பதில் பிரதேச மட்டத்திலான பங்களிப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்படும்.
இதற்கமைய,
முன்மொழியப்பட்ட இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புத்தசாசன, சமய
மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் வீடமைப்பு, நிர்மாணத்துறை
மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு
யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





