மத்திய மலையகத்தின் ஆன்மீக–கல்வி வரலாற்றில் புதிய மைல்கல்!!
மத்திய
மலையகத்தின் ஆன்மீக, கல்வி மற்றும் பண்பாட்டு வளர்ச்சிக்கு புதிய ஒளியைச்
சேர்க்கும் வகையில், இராமகிருஷ்ண மிஷனின் இருபெரும் மகத்தான துறவியரான
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் மற்றும் முத்தமிழ் வித்தகர் சுவாமி
விபுலானந்த அடிகளார் ஆகியோரின் திருவுருவச்சிலைகள் பூண்டுலோயாவில் இன்று
(7) சனிக்கிழமை நிறுவப்படவுள்ளன.
இது மத்திய மலையகத்தின் வரலாற்றில் நினைவுகூரத்தக்க ஒரு சரித்திர நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
உலகளாவிய
ராமகிருஷ்ண மிஷனை நிறுவி இந்திய இந்து ஆன்மீக சிந்தனையை உலக அரங்கில்
உயர்த்திய வீரத் துறவி சுவாமி விவேகானந்தர், இளைஞர்களுக்கான
விழிப்புணர்வின் சின்னமாகத் திகழ்கிறார். அதேவேளை உலகின் முதல் தமிழ்
பேராசிரியராகப் போற்றப்படும், இலங்கை கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும்
பழந்தமிழ் கிராமத்தில் அவதரித்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த
அடிகளார் தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தை உலகளவில்
உயர்த்திய பெருமைக்குரிய அறிஞர் துறவி.
இவ்விரு
பெரும் துறவிகளின் திருவுருவச்சிலைகள் ஒரே வளாகத்தில் நிறுவப்படுவது
ஆன்மீகமும் அறிவும் இணையும் அடையாளமாகக் கருதப்படுகிறது.
அவுஸ்திரேலிய
காரைதீவு மக்கள் ஒன்றியத்தின் (ஒஸ்கார் – AusKar) நிருவாக குழுவின் (
Executive committee) ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, இன்று 07ஆம்
திகதி சனிக்கிழமை, நுவரேலியா மாவட்டம், கொத்மலை பிரதேச செயலாளர்
பிரிவிலுள்ள பூண்டுலோயா சீன் தோட்டம் விவேகானந்த மகாவித்தியாலயத்தில்
நடைபெறவுள்ளது.
வித்தியாலய
அதிபர் ஆறுமுகம் ரவீந்திரன் தலைமையில் நடைபெறும் இந்த விழா கல்வி,
ஆன்மீகம் மற்றும் சமூக சேவையை இணைக்கும் ஒரு அரிய நிகழ்வாக அமைகிறது.
இலங்கைக்கான
இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ மஹராஜ்
மற்றும் மட்டக்களப்பு மாநில பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா
ஜீ மஹராஜ் ஆகியோர் பிரதம ஆன்மீக அதிதிகளாக கலந்து கொண்டு சிலைகளை சுப
வேளையில் திறந்து வைக்கவுள்ளனர்.
அவர்களின் வருகை இந்த நிகழ்வுக்கு மேலும் ஆன்மீக மரியாதையையும் பெருமையையும் சேர்க்கிறது.
நட்சத்திர
அதிதியாக ஒஸ்கார் சார்பில் தாயக இணைப்பாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப்
பணிப்பாளருமான வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா கலந்து கொண்டு
விழாவைச் சிறப்பிக்கவுள்ளார்.
மேலும், கொத்மலை வலய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் ,மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில்
வாழும் காரைதீவு மக்களின் பங்களிப்பு, குறிப்பாக ஒஸ்கார் அமைப்பின் தலைவர்
கந்தசாமி பத்மநாதன் தலைமைத்துவத்தில், செயலாளர் தி.லாவண்யன் மற்றும்
இணைப்பாளரும் பொருளாளருமான வீ.விவேகானந்தமூர்த்தி ஆகியோரின் ஒழங்கமைப்பில்
இவ் அனுசரணை மத்திய மலையகத்தின் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான
உறுதியான ஆதரவாகக் கருதப்படுகிறது.
அண்மையில்
"தித்வா" பேரிடரில் பாதிக்கப்பட்ட கண்டி, கம்பளை, பூண்டுலோயா, பதுளை, பசறை
உள்ளிட்ட மலையக மக்களுக்கு ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களையும் கற்றல்
உபகரணங்களையும் ஒஸ்கார் வழங்கி வைத்தது தெரிந்ததே.
மத்திய
மலையகத்தில் நுவரேலியா மாவட்டத்தில் திறந்து வைக்கப்படும் இருபெரும்
துறவியரின் முதலாவது திருவுருவச்சிலைகள் இவை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் இந்நிகழ்வு ஒரு சாதாரண திறப்பு விழாவைத் தாண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சாரச் சின்னமாக உயர்கிறது.
இன்று
இந்நிகழ்வை முன்னிட்டு “ஒஸ்காரின் துறவியர் படிவமலர்” எனும் நினைவு மலரும்
வெளியிடப்படவுள்ளது. இதில் ஒஸ்காரின் பணிகள், துறவியரின் வாழ்க்கை வரலாறு,
அவர்களின் கல்வி மற்றும் ஆன்மீகச் சேவைகள் குறித்து கட்டுரைகள்
இடம்பெறுகின்றன.
இந்நினைவு மலர் எதிர்கால தலைமுறைக்கு வழிகாட்டும் ஆவணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,
ஒஸ்கார் தலைவர் க. பத்மநாதன் அவர்களின் அனுசரணையில், பேரிடர்களால்
பாதிக்கப்பட்ட சுமார் 200 மலையக மக்களுக்கு புதிய வஸ்திரங்கள்
வழங்கப்படவுள்ளன. ஆசிரியைகளுக்கு சீருடை சாறியும் ஒஸ்கார் தலைவர் திரு.
பத்மநாதன் வழங்கி வைக்கிறார்.
இது
சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் மனிதநேயப் பணியாகக் கருதப்படுகிறது.
சமூக சேவை மற்றும் ஆன்மீகச் சேவை இணையும் இந்த நிகழ்வு, ஒற்றுமை மற்றும்
கருணையின் செய்தியை வலியுறுத்துகிறது.
அத்துடன் விழாவில் கலந்து கொள்பவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கும் ஒஸ்கார் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
இச்
சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்த ஒத்தாசை
வழங்கிய ஒஸ்கார் உறுப்பினர்கள், பாடசாலை நிர்வாகம், தாயக இணைப்பாளர்
மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றியைத்
தெரிவித்துள்ளனர்.
ஆன்மீக
உயர்வு, கல்வி விழிப்புணர்வு, சமூக ஒற்றுமை ஆகிய மூன்றையும் இணைக்கும்
இந்தச் சிலை நிறுவும் விழா, மத்திய மலையக மக்களின் பண்பாட்டு நினைவுச்
சின்னமாகவும் எதிர்கால தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் கலங்கரை விளக்கமாகத்
திகழும் என்பதில் ஐயமில்லை.
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவு நிருபர்












.jpg)












