க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே தனியார் கல்வி நிலையங்கள் க.பொ.த. உயர்தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும்

 


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை எழுதிய மாணவர்களுக்கு 15 நாட்களின் பின்னரே தனியார் கல்வி நிலையங்கள் க.பொ.த. உயர்தரக் கற்றலை ஆரம்பிக்க வேண்டும் என பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்துள்ளார்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தரப் பரீட்சையை மாணவர்கள் எழுதி முடித்துள்ளனர்.

தற்போது இப்பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

இம்முறை கல்விப் பொதுத் தர சாதாரண தரம் எழுதிய மாணவர்கள் பரீட்சை முடிந்ததும், குறைந்தது 15 நாட்களுக்குப் பின்னர்தான் அடுத்தகட்டமாக அவர்களது உயர்தரக் கற்றலுக்கான வகுப்புகளை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்ததாகவும் கூறினார்.

எனினும், சனிக்கிழமை (28) கல்விப் பொதுத் தர உயர்தரப் பாடங்களுக்காக புதிய வகுப்புகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனது பிரதேச சபையில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். இது எமது எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு, தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுக்கும் பணிவான வேண்டுகோள் ஆகும்.

பிரதேச சபையால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவற்றை மீறி செயற்படும் கல்வி நிலையங்கள் மூடப்படும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், புதிதாக தனியார் கல்வி நிலையங்களில் இணையும் மாணவர்களிடமிருந்து எந்தவித முற்பதிவு கட்டணங்களும் பெறக்கூடாது. அவ்வாறு பெற்றால், தனியார் கல்வி நிலையங்களின் அனுமதிப் பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.

30 வருடப் போராட்டம் முடிவடைந்த பின்னர் எம் சமூகத்திற்கு மிக முக்கியமானது கல்விதான். ஆகவே கல்விக்கு நான் எதிரானவன் அல்ல. கல்வியை சீரான முறையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதையே நான் விரும்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.