முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே குறித்த ஐந்து வைத்தியர்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வரவழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், இங்கிலாந்துக்கு விஜயம் செய்தபோது, அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதி இந்தக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, திடீர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையிலும் அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு குற்றப் புலனாய்வு பிரிவு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





