ராமர் பாலம் தொடர்பான பெயர்ப்பலகையை அகற்றுமாறு கோரி மன்னார் செபஸ்தியார் பேராலயத்தின் பங்கு தந்தை கோரிக்கை .


 

மன்னார் பிரதான பாலத்தின் அருகாமையில் வட மாகாண சுற்றுலா பணியகத்தினால் சமீபத்தில் நிறுவப்பட்டுள்ள ராமர் பாலம் தொடர்பான பெயர்ப்பலகையை அகற்றுமாறு கோரி, மன்னார் செபஸ்தியார் பேராலயத்தின் பங்கு தந்தையும் மன்னார் மறைக்கோட்ட முதல்வருமான அருட்பணி கிறிஸ்து நாயகம் அடிகளார், மன்னார் நகர முதல்வருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, மன்னார் நகரத்தின் நுழைவாயிலாகக் கருதப்படும் பிரதான பாலத்தின் அருகாமையில், இந்து சமயக் கடவுளர்களின் படங்களைத் தாங்கிய ராமர் பாலம் தொடர்பான பெயர்ப்பலகை நிறுவப்பட்டுள்ளது. இப்பெயர்ப்பலகை, மன்னாரில் நீண்ட காலமாக நிலவி வரும் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும், மதங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைத்து தேவையற்ற குழப்பங்களையும் முறுகல் நிலைகளையும் உருவாக்கக்கூடியதாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மேலும், இப் பெயர்ப்பலகை தொடர்பாக பொதுமக்கள் பலர் தங்களது அதிருப்தி மற்றும் எதிர்ப்புகளை நாளாந்தம் தெரிவித்து வருவதாகவும், மன்னாரில் வாழும் அனைத்து மதத்தினரின் நன்மை கருதி, இப்பெயர்ப்பலகையை அந்த இடத்திலிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாகவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விடயம் தற்போது ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது

ராமர் பாலம் என்பது ஒரு மதச் சின்னமாக அல்லாமல், மன்னாரின் வரலாற்று மற்றும் பண்பாட்டு அடையாளமாகப் பார்க்கப்பட வேண்டும் என்றும், தொன்று தொட்டு பேசப்பட்டு வரும் ராமர் கதையை சுற்றுலா பெயர்ப்பலகையில் காட்சிப்படுத்துவதில் தவறில்லை. இராமாயணத்துடன் தொடர்புபட்ட இந்த இடத்தை பார்வையி டுவதற்காகவே இந்தியாவில் இருந்து ஏராளமான பயணிகள் வருகை தருகின்றனர். இது மன்னாரின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றும் இந்நிலையில் இந்தப் பெயர்ப் பலகையினை சிலர் விமர்சிப்பது அர்த்தமற்றது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

 அதேவேளை, பல மதங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக அமைதியாக இணைந்து வாழ்ந்து வரும் மன்னார் சமூகத்தில், இவ்வாறான விடயங்கள் தேவையற்ற முரண்பாடுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதும் சிலரது கவலையாக உள்ளது