மாணவர்கள், சீருடை, காலணிகள் மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்கள் இல்லாமல் பாடசாலைக்கு வருகை தந்தால், அவர்களை வித்தியாசமாக நடத்தக்கூடாது

 


அவசரநிலை ஏற்பட்டால் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

 அதற்கமைய, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக எவ்வாறான விடயங்களை முன்னெடுக்க வேண்டும்? எவ்வாறான விடயங்களை செய்யக்கூடாது? என இரண்டு பிரிவுகளாக இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 அதன்படி மாணவர்கள், சீருடை, காலணிகள் மற்றும் ஏனைய பாடசாலை உபகரணங்கள் இல்லாமல் பாடசாலைக்கு வருகை தந்தால், அவர்களை வித்தியாசமாக நடத்தக்கூடாது என்றும், மாணவர்கள் கூறுவதை செவிமடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 மாணவர்கள், பாடசாலையை பாதுகாப்பாக உணரக்கூடிய இடமாக மாற்ற வேண்டும்.அத்துடன் அவர்களுக்கு எதிர்காலத்திற்கான நம்பிக்கையை வழங்க வேண்டும் என்றும் அந்த வழிகாட்டல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 மாணவர்கள், அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளை மீண்டும் அனுபவிக்கக்கூடாது. பேரிடர்களை எதிர்கொண்ட மாணவர்களை பாரபட்சமான முறையில் நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர்களின் ஓய்வறையிலோ அல்லது பாடசாலையில் உள்ள பிற இடங்களிலோ பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பற்றி விவாதிக்கக்கூடாது.

 அதேநேரம் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை மாணவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.