தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சி-மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

 


உலகச் சந்தை மற்றும் உள்ளூர் சந்தையிலும் தங்கத்தின் விலை, ஜனவரி மாதத்தின் இறுதி நாளான இன்றைய தினம் எதிர்பாராத விதமாக திடீர் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையில் நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ரூ. 15,000 ஆல் அதிகரித்திருந்த நிலையில், இன்று (31) ஒரே நாளில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 20,000 ஆல் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம்:

புதிய தரவுகளின்படி, இலங்கையில் தங்கத்தின் விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளன:
• 24 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 3,80,000
• 22 கரட் தங்கம் (ஒரு பவுண்): ரூ. 3,49,600

• 24 கரட் தங்கம் (ஒரு கிராம்): ரூ. 47,500
• 22 கரட் தங்கம் (ஒரு கிராம்): ரூ. 43,700

இலங்கையைப் போலவே இந்தியச் சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமான அளவில் குறைவடைந்துள்ளதுடன், சர்வதேச ரீதியாகவும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சடுதியான சரிவைச் சந்தித்துள்ளன.

இன்று காலை நிலவரப்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,893.2 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் 8.15 வீத வீழ்ச்சியாகும்.

வெள்ளியின் விலையும் பாரிய சரிவை எதிர்கொண்டுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 25.46 வீதத்தால் குறைந்து, 85.34 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச வர்த்தக செய்திகளின்படி, கடந்த 48 மணித்தியாலங்களில் தங்கம் மற்றும் வெள்ளிச் சந்தையிலிருந்து சுமார் 15 ட்ரில்லியன் டொலர்கள் வெளியேறியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போதைய விலைச் சரிவு ஏற்பட்டிருந்தாலும், தங்கத்தின் விலையானது 2025 ஆம் ஆண்டை விட இன்னும் இரண்டு மடங்கு உயர்மட்டத்திலேயே காணப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.