மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிசனின் அனுசரணையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,253 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. .

 










இலங்கையின் மட்டக்களப்பு, பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக, ராமகிருஷ்ண மிஷன், மட்டக்களப்புக் கிளை விரிவான வெள்ள நிவாரணப் பணிகளை முன்னெடுத்தது.


மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் குருகுல பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ தலைமையிலான குழுவினர் இந்த நிவாரண நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக முன்னெடுத்தனர்.

 முதற்கட்டமாக 29 நவம்பர் முதல் 5 டிசம்பர் வரை மட்டக்களப்பு மாவட்டத்திலும், இரண்டாம் கட்டமாக 3 முதல் 10 டிசம்பர் வரை பதுளை மாவட்டத்திலும், மூன்றாம் கட்டமாக 24 முதல் 27 டிசம்பர் வரை கண்டி மாவட்டத்திலும் நிவாரணப் பணிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக, 25 நவம்பர் அன்று அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் 300 வெள்ளப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 3,253 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இதன் மூலம் 11,402 பேர் பயனடைந்தனர்.

 ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரிசி, பருப்பு, மைதா, சர்க்கரை, சோயா துண்டுகள், தேயிலைத் தூள், உப்பு மற்றும் கொண்டைக்கடலை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டதாக ராமகிருஷ்ண மிஷன் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதுடன், அவர்களின் துயரங்களைத் தணிக்கும் நோக்கில் இந்நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் மிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

(வி.ரி.சகாதேவராஜா)