மட்டக்களப்பு வவுணதீவில் 13 உயிர்மாய்ப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .

 


கடந்த வருடம் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 15 தற்கொலை சம்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் இதில் 13 தற்கொலைகளுக்கு கசிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் தாக்கம் செலுத்தியுள்ளதாக வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.


கடந்த வருடம் 20வயதுக்குட்பட்ட நான்கு பேர் தற்கொலைசெய்துள்ள நிலையில் அதில் மூன்று பேரின் தற்கொலையில் இந்த கசிப்பு தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் நேற்று(30) மாலை நடைபெற்றது.


பிரதேச அபிவிருத்திக்குழு மீளாய்வு கூட்டமானது மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தியின் ஒழுங்கமைப்பில் பிரதேச அபிவிருத்திக்குழு தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது.


இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத்,மண்முனை மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் கோபாலபிள்ளை,பிரதி தவிசாளர் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள்,விவசாய அமைப்புகளின் தலைவர்கள்,பொலிஸார் என பலர் கலந்துகொண்டனர்.


இதன்போது கூட்ட ஆரம்பத்தில் கடந்த கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களின் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் முடிவுறுதப்படாத தீர்மானங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.


மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதியில் தற்போது அறுவடைகள் ஆரம்பித்துள்ள நிலையில் யானைகளின் அட்டகாசங்கள் காரணமாக பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வதாக இங்கு விவசாய அமைப்புகளினாலும் பிரதேசசபையின் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டதுடன் இந்த யானை பிரச்சினையை தடுப்பதற்கு மக்கள் வாழும் பகுதிக்குள் ஊடுறுவியுள்ள யானைகளை காட்டு பகுதிகளுக்கு அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.


இதன்போது அறுடை ஆரம்பித்துள்ள நிலையில் வவுணதீவின் பல்வேறு பகுதிகளிலும் புகுந்துள்ள யானைகளை யானைவேலிகளுக்கு அப்பால் கொண்டுசெல்வதற்கு வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பணிப்புரைகள் விடுக்கப்பட்டதுடன் அறுவடைக்கு பின்னர் யானைகள் ஊடுறுவாமல் தடுப்பதற்கான யானைவேலிகளை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.


மிகமுக்கியமாக வவுணதீவு மற்றும் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் கசிப்பு மற்றும் சட்ட விரோத போதைப்பொருள் வியாபாரங்களினால் பாரியளவில் சமூக சீர்கேடுகள் நடைபெறுவதுடன் தற்கொலைகளும் அதிகரித்துவருவதாக இங்கு பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மற்றும் சுகாதார துறையினரால் சுட்டிக்காட்டப்பட்டது.


கசிப்பு காரணமாக மண்முனை மேற்கு பிரதேச செயலகப்பிரிவின் ஒவ்வொரு கிராமமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த வருடத்தில் இரண்டு சிறுவயதினர் தற்கொலைசெய்துள்ளதாகவும் அதில் ஒருவர் 16வயதில் இருந்து கசிப்பு குடிக்கு அடிமையான நிலையில் 18வயதில் நஞ்சி அருந்தி உயிரிழந்துள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இளங்கோ அவர்களினால் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.


அதேபகுதியில் இன்னும் அதேவயதுடைய மூன்று பிள்ளைகள் கசிப்புக்கு அடிமையான நிலையில் உள்ளதாகவும் வீதியை அமைத்தாலும் கட்டிடம் அமைத்தாலும் மக்களின் பாதிப்புகள் சரிசெய்யாவிட்டால் எது கட்டினாலும் பிரயோசனம் அற்றது எனவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.


பொலிஸாரும் சமூக கட்டமைப்பினரும் இணைந்து கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என்பதுடன் பொலிஸாருக்கு கசிப்பு தொடர்பான தகவல்கள் வழங்கப்படும்போது அது கசிப்பு உற்பத்தியாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.


கசிப்பு உற்பத்திகளை தடுக்க பாரியளவிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதற்கான அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பினையும் எதிர்பார்ப்பதாக இங்கு கருத்து தெரிவித்த வவுணதீவு,ஆயித்தமலை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் பொறுப்பதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது.


பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மண்கடத்தல்களையும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் இதன்போது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதேபோன்று வீதிகளில் அலையும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டதுடன் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்குமான  நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.


மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்தி பணிகள் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய வீதி அபிவிருத்தி பணிகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் மிக மோசமான நிலையில் உள்ள வீதிகளை புனரமைப்பது குறித்தும் ஆராயப்பட்டது.


இதன்போது வவுணதீவு பிரதேசத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்தும் ஆராயப்பட்டதுடன் பிரதேசத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. எதிர்வரும் 02ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து நெற்களஞ்சிய சாலைகளும் திறக்கப்பட்டு நெல் கொள்வனவு முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.