ஈழத்தமிழர்களின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியல் மறுமலர்ச்சியிலும் மிகமுக்கியமான ஒரு ஆளுமையும், கொடைவள்ளலுமான சேர்.பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும் 09 ஆம் திகதி,வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
சேர்.பொன் அருணாசலம் நிதியத்துடன் இணைந்து, கொழும்பு வடக்கு சைவ பரிபாலன சங்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு நினைவுப் பேருரை ஆற்றவுள்ளார்.
அன்றைய தினம் பிற்பகல் 4.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் உள்ள சேர்.பொன் அருணாசலத்தின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்துதலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.
சேர்.பொன் அருணாசலம், பிரித்தானியர்களால் இலங்கை அரச பணிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கையர் என்ற பெருமைக்குரியவராவார்.
1919ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை தேசிய காங்கிரஸின் முதல் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சேர்.பொன் அருணாசலம் தமிழர் - சிங்களவர் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.
இலங்கைக்கெனத் தனிப் பல்கலைக்கழகம் ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, "இலங்கை பல்கலைக்கழகச் சங்கம்" உருவாகக் காரணமாக இருந்தனால் இவர் "இலங்கை பல்கலைக்கழகக் கல்வியின் தந்தை" எனப் புகழப்படுகிறார்.
நீதிபதி, மாவட்ட அதிபர் எனப் பல்வேறு அரச பதவிகளை அலங்கரித்த இவர், தலைமைப் பதிவாளர் நாயகமாகப் பணியாற்றிய காலப்பகுதியில் இவர் செய்த சீர்திருத்தங்கள் இன்றும் பேசப்படுகின்றன.
1901ஆம் ஆண்டு இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை இவரது மிகச்சிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது.
இது இலங்கையின் சமூக, பொருளாதார நிலையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது. இவரது சேவையைப் பாராட்டி பிரித்தானிய அரசு 1913ஆம் ஆண்டு "சேர்" பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






