வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகள் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படுகிறது.

 




வாக்காளர் பெயர் பட்டியல் திருத்தப் பணிகளை நாளை (01) முதல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறை அந்த பணிகளுக்காக கிராம உத்தியோகத்தர்கள் வீடு வீடாகச் செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும்  தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி தமது வீட்டின் செல்லுபடியான வாக்காளர் பெயர் பட்டியலில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளடக்கப்பட வேண்டிய புதிய பெயர்கள் தொடர்பிலான தகவல்களை கணக்கெடுப்பு அதிகாரிகளிடம் வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை 2 மாத காலத்திற்கு முன்னெடுக்கப்படுவதுடன், அதன் பின்னர் உரிய தகவல்களை உள்ளடக்கிய பெயர்ப்பட்டியல் காட்சிப்படுத்தல், உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் மே 05 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக மேற்படி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க அந்த அறிவித்தல் வெளியாகி 28 நாட்களுக்குள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்குமாறும் 2026 ஆம் ஆண்டு திருத்தத்தின் போது தகைமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் ER படிவத்தில் பெயரை உள்ளடக்க முடியாமல் போன நபர்களுக்கு இந்தக் காலப்பகுதியில் உரிமைகோரல் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் 2026 ஆம் ஆண்டு பெயர் பட்டியலுக்குத் தகுதியற்ற ஒருவரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பின், அது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிப்பதற்கு இந்தக் காலப்பகுதியில் சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அச்சிடப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பிரிவுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தரிடமிருந்தோ அல்லது மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திலிருந்தோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.