தெற்காசியாவிலேயே மிக அதிகமான யானை இறப்புகள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை விட இலங்கையில் யானைகளின்
எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தபோதிலும், மனித-யானை மோதல் காரணமாக ஏற்படும்
யானை இறப்பு விகிதத்தில் இலங்கை உலக அளவில் முதலிடத்தில் இருப்பதாக
சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தியாவில் சுமார் 20,000 முதல் 27,000
யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் சுமார் 6,000
முதல் 7,000 யானைகளே வாழ்கின்றன.
இருப்பினும், மக்கள் தொகைக்கு ஏற்ப
ஒவ்வொரு ஆண்டும் இறக்கும் யானைகளின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது,
இப்பிராந்தியத்திலேயே இலங்கையில்தான் அதிக இறப்புகள் பதிவாகின்றன என்பது
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்தின் தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் நடுப்பகுதி வரை 397 யானைகள் உயிரிழந்துள்ளன.
இதற்கு முன்னர் 2024 ஆம் ஆண்டில் 386 முதல் 388 வரையிலான இறப்புகள் பதிவாகியிருந்தன.
அதேசமயம், 2023 ஆம் ஆண்டிலேயே மிக மோசமான பதிவாக 488 யானைகள் உயிரிழந்திருந்தன.
இந்த இறப்புகளில் பெரும்பாலானவை மனித-யானை மோதலினாலேயே ஏற்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள்,
சட்டவிரோத மின் வேலிகள், தொடருந்து விபத்துக்கள் மற்றும் உணவில் மறைத்து
வைக்கப்படும் 'ஹக்க பட்டாஸ்' எனப்படும் வெடிபொருட்கள் மூலம் யானைகள்
கொல்லப்படுகின்றன.
இந்த ஆண்டு பதிவான மொத்த இறப்புகளில் 71
யானைகள் துப்பாக்கிச் சூட்டினாலும், 56 யானைகள் மின்சாரம் தாக்கியும், 46
யானைகள் புகையிரத விபத்துக்களினாலும், 20 யானைகள் 'ஹக்க பட்டாஸ்'
வெடித்ததாலும் உயிரிழந்துள்ளன.
மேலும், விஷம் வைக்கப்பட்டதால் இரண்டு
யானைகளும், கைவிடப்பட்ட கிணறுகளில் விழுந்ததாலும் மற்றும் நீரில்
மூழ்கியதாலும் சில யானைகளும் உயிரிழந்துள்ளன.
ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக, கடந்த
வாரம் மிஹிந்தலையிலுள்ள சீப்புக்குளம் பகுதியில் மூன்று நபர்களால் யானை
ஒன்று தீ வைத்து கொல்லப்பட்டுள்ளது.
சூழல் மற்றும் இயற்கை வளங்கள் பிரதி
அமைச்சர் அந்தோனி ஜெயக்கொடி கருத்து தெரிவிக்கையில், 'டிட்வா'
சூறாவளிக்குப் பின்னர் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாகக்
குறிப்பிட்டார்.
மின் வேலிகள் சேதமடைந்ததால் யானைகள்
கிராமங்களுக்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளதுடன், வனப்பகுதிகளில்
புல்வெளிகள் சேறு நிறைந்ததாக மாறியுள்ளதால் யானைகளுக்கு உணவுத்
தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
வனவிலங்கு அமைச்சினால் பராமரிக்கப்படும்
சுமார் 5,700 கிலோமீட்டர் நீளமான மின் வேலிகளில் 838 கிலோமீட்டர்
சூறாவளியால் சேதமடைந்துள்ளதுடன், அதில் அரைவாசிப் பகுதி தற்போது
திருத்தப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு காரணமாக நான்கு யானைக்
குட்டிகள் உயிரிழந்துள்ளதாகவும், மீட்கப்பட்ட ஆறு குட்டிகளில் ஒன்று
மின்னேரியா தேசிய பூங்காவிற்கு விடுவிக்கப்பட்டு, ஏனையவை கிரித்தலை
வனவிலங்கு அலுவலகத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் யானைகள் பாதுகாப்பு
பிரதி பணிப்பாளர் யூ.எல்.தௌபிக் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள காட்டு யானைகளின்
எண்ணிக்கையைப் பாதுகாக்கவும், மனித-யானை மோதல்களைக் குறைக்கவும் இன்னும்
வலுவான நடவடிக்கைகள் அவசரமாகத் தேவைப்படுவதாக வனவிலங்கு பாதுகாப்பு
திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.





