மாதங்களில் மார்கழி மாதம் மகத்துவம் மிக்கது. அது சர்வ சமயத்தினருக்கும் ஆன்மீக வழிபாட்டுக்குரிய முக்கியமான புனித மாதமாகும்.
தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் ஒன்பதாவது மாதமாகும். இந்த மாதம் முழுவதும் இறைவனுக்கு உகந்ததாகவே போற்றப்படுகிறது.
ஓர்
ஆண்டில் பதினொரு மாதங்கள் கோயில்களுக்கு போக முடியாதவர்கள் மார்கழி மாதம்
மட்டும் கோயிலுக்கு சென்றாலே வருடம் முழுதும் கோயிலுக்கு சென்ற பலன்கள்
கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
எல்லா கஷ்டங்களும்
நீங்கி, தை மாதத்திலிருந்து இருந்து புது வாழ்வு கிடைக்க இம்மாதத்தில்
பிரார்த்தனை செய்யப்படுகிறது. “பீடு” (பெருமைகள்) நிறைந்த மாதம் என்பது
மருவி “பீடை” மாதம் என ஆனது.
ஸ்ரீகிருஷ்ண பகவான் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் "என்று பகவத் கீதையில் அருளியுள்ளார்.
மார்கழி மாதம் முழுவதும் இறைவனை வழிபடுவதால் இம்மாதத்தில் எவ்வித குடும்ப மங்கள விழாக்கள் பொதுவாக நடத்தப்படுவதில்லை.
இம்மாதம் தேவர்களுக்கு அதிகாலை நேரமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் அதிகாலை நீராடி ஆலய தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
சூரியனின்
நகர்வின் அடிப்படையில் இயற்கையாக அமையும் புண்ணிய காலங்கள் உத்தராயண
காலமும் தட்சணாயன காலமும் ஆகும். உத்தராயணம் என்றால் வடக்கு என்று பொருள்.
அயனம் என்றால் பயணம். சூரியன் வடக்கு திசையை நோக்கிய தனது பயணத்தைத்
தொடங்கும் நாள், அதாவது தை மாதம் முதல் நாள் உத்தரயண புண்ணிய காலத்தின்
தொடக்க நாள் ஆகும். தை மாதம் ஆரம்பிக்கும் உத்தராயணம் ஆனி வரை இருக்கிறது.
இந்த ஆறு மாத காலத்திற்கு சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார்.
இது
முடிந்தவுடன் ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய தனது
பயணத்தைத் தொடங்குகிறார். இதை தட்சிணாயனம் என்று அழைக்கிறார்கள். ஆடி மாதம்
முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும் சூரியன், அடுத்த ஆறு
மாதங்களுக்கு அதாவது மார்கழி மாதம் வரை தெற்கு நோக்கியே பயணிக்கிறார்.
மார்கழியில் தேவர்களுக்கு அதிகாலை. எனவே மார்கழி மாதம் மகத்துவம் மிக்கது.
மார்கழி
மாதத்திற்கு ஏராளமான புராண சிறப்புகள் உள்ளன. மார்கழி மாதத்தில் மகாபாரத
யுத்தம் நடைபெற்றதாக இதிகாசம் கூறுகிறது. மற்றும் ஆண்டாள் திருமாலை
திருமணம் புரிந்ததும், திருப்பாற்கடல் கடையும் போது கிடைத்த விஷத்தை சிவன்
உண்டு உலகை காப்பாற்றியதும், இந்திரனால் பெருமழை உருவானபோது கோகுலத்தில்
உள்ள அனைவரையும் காப்பாற்ற கோவர்த்தனகிரி மலையை, கிருஷ்ணர் குடையாகப்
பிடித்து காப்பாற்றியதும் இந்த மார்கழி மாதத்தில்தான்.
மார்கழி
மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த மார்க்கண்டேயர் மரணத்தை வென்றதாக
மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. ஆகையால் ம்ருத்யுஞ்ச ஹோமம் செய்ய
இம்மாதம் மிக சிறந்தாகக் கருதப்படுகிறது.
மாணிக்கவாசக நாயனார் திருவெம்பாவையில், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்” - என்றும்
ஆண்டாள்
நாச்சியார் “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர்
போதுமினோ நேரிழையீர்” என்றும், அதிகாலை வழிபாடு மகத்துவம் பற்றி
பாடியுள்ளார்கள்.
மார்கழி
மாதம் முழுவதும் பெரும்பான்மையான கோயில்களில் திருப்பாவை, திருவெம்பாவை,
திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன
மார்கழியில்
அதிகாலையில் எழுந்து நடக்கும் போது இயற்கை காற்றை சுவாசிப்பதால்
மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களும் குணமாகும் என்று முன்னோர்
அறிந்து கொண்டனர்.
அறிவியலின்படி மார்கழி மாதத்தில்
ஆக்ஸிஜன் நிறைந்த ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் அதிகாலை 4.30 மணி முதல்
6.00 மணி வரை இருக்கும். ஓசோன் வாயு நுரையீரலுக்கு சென்று புத்துணர்ச்சி
உண்டாக்கும். மார்கழி மாத காற்று சருமத்திற்கும், உடல் நலத்திற்கும்
மிகவும் நல்லது என்பதை விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியிலும் தெரியவந்துள்ளது.
அதுவே பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது.
மார்கழி
மாதத்தில் வாசலில் மிகப்பெரிய கோலம் போட்டு, அதில் வண்ண பொடி தூவுவதும்,
பூசணிப் பூவினை பசும் சாணத்தில் வைப்பது இன்றும் சம்பிரதாயமாக
பின்பற்றப்படுகின்றது. பசும் சாணம் கிருமி நாசினியாகும்.
அந்த
காலத்தில் தங்கள் வீட்டில் திருமண வயதுடைய பெண் இருக்கிறாள் என்பதைத்
தெரிவிக்கும் அடையாளமாகவே கோலத்தின் மீது பூசணி பூ வைப்பார்கள்.
அதிகாலையில் வீதியில் பஜனைக்கு வருபவர்கள், அந்த வழியாக செல்பவர்கள் அதனை
புரிந்து கொண்டு, மார்கழி முடிந்ததும், தை மாதம் திருமணம் பேசி மணம்
முடித்து விடுவார்கள்.
“மார்கழியில்
பூசணிப் பூ வைக்க, தை மாதத்தில் திருமணம் கைகூடிவரும் என்பர்”. மார்கழி
மாதங்களில் வீட்டு முன்பு கோலமிட்டால் மகாலட்சுமி வீடு தேடி வருவார் என்பது
நம்பிக்கை. கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம், நினைவாற்றல் கிடைக்கிறது.
மனஒருமைப்பாடு இருந்தால் தான் புள்ளிகளைச் சரியாக இணைத்துக் கோலம் போட
முடியும். கோலம் இடும் பெண்களின் சிந்திக்கும் திறன் சிறப்பாக இருக்கும்
என்றும், நல்ல மனநிலையோடு இருப்பார்கள் என்றும் உடலிலும் மிக நல்ல
அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன என விஞ்ஞான ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
மார்கழி
மாதத்தில் அதிகாலையிலேயே ஆலய வழிபாடு தொடங்கிவிடும். இம்மாதத்தில்
திருவாதிரை, வைகுண்ட ஏகாதசி, அனுமந் ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை
நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற
விழாக்கள், பண்டிகைகள், விரதங்கள் கடைபிடிக்கபடுகின்றன. இம்மாதத்தில்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை
நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் ஆகியோரின் குருபூஜை
நடத்தப்படுகிறது.
பன்னிரு ஆழ்வார்களில் தொண்டரடிப்
பொடியாழ்வார் ஜெயந்தி இம்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. ரமண மகிரிஷி, அன்னை
சாரதா தேவியார், பாம்பன் சுவாமிகள் ஆகியோர் இம்மாதத்தில் தான்
தோன்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத்தவிர
கிறிஸ்த்தவர்களின் கிறிஸ்மஸ், புதுவருட பிறப்பு, முகமதியர்களின் பக்ரீத்
போன்ற பண்டிகைகள் இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்றன. புத்த, சீக்கிய மற்றும்
சமண மதங்களிலும் இந்த மாதம் புனித மாதமாக கருதப்படுகிறது.
நாமும்
ஆன்மிக மலர்ச்சிக்கு சிறந்த மாதமாக கருதப்படும் இந்த மார்கழி மாதத்தில்
கடவுள்களை மனதால் துதித்துப் போற்றுவோம்..... நற்பேறு பெறுவோம்...
திருவெம்பாவை
திருவெம்பாவை
என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக்
குறித்து எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை
பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி
மாதத்தில் பாடுவதை இந்துக்கள் மரபாகக் கொண்டுள்ளார்கள்.
அந்தவகையில்,
திருவெம்பாவை விரதம் மற்றும் ஊர்வலம் இன்று(25) வியாழக்கிழமை அதிகாலை
ஆரம்பமாகின்றது. சிவபெருமானை நினைந்து வழிபடும் இவ்விரதமானது சிவசக்தியின்
அருட்செயலையும் நவசக்திகள் ஒன்றுசேர்ந்து சிவபெருமானைத் துதிப்பதும்
திருவெம்பாவையின் தத்துவமாகும்.
திருவெம்பாவை
தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 03 ஆம்
திகதி திருவாதிரை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைகிறது.
இக்காலகட்டத்தில்
பிரம்ம முகூர்த்த வேளையில் ஆலய வழிபாட்டில் ஈடுபடுவதுடன், திருவெம்பாவை
ஊர்வலத்திலும் கலந்து கொண்டு எல்லாம் வல்ல சிவபெருமானின் அருளைப் பெறுவது
இந்துக்களின் கடமையாகும்.
பெண்கள்
அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்று பெருமாளை வணங்கி திருப்பாவை
பாடுகின்றனர். சிவபெருமானின் பக்தைகள் நோன்பு நோற்பதற்காகத் தோழியை
துயிலெழுப்பச் செல்லும் காட்சி திருவெம்பாவையிலும் வருகிறது. சிவனுடைய
அடியார்களே கணவனாக வர வேண்டும், அவனோடு சேர்ந்து சிவனைத் தொழ வேண்டும்
என்பதே திருவெம்பாவையில் வருகிற பாவை நோன்பின் நோக்கமாகும்.
எனவே அத்தகைய மகத்துவம் மிக்க மார்கழி மாதத்தில் மகத்தான திருவெம்பாவை நோன்பை நோற்று வாழ்வில் உய்வோமாக.
வித்தகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா
காரைதீவுநிருபர்










